அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறார்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் , மார்ச் 16ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காகச் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.

போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தற்போது வரை உள்ளனர்.

இந்நிலையில் அவர்களது பயணம், தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில் அவர்களைப் பூமிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இருவரும் விரைவில் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 16ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.