திருவண்ணாமலை

ரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சிறுவன் சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள சிறுவர்களில் ஒருவராக உள்ளார்.

 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் சக்தி.   இவர் தனது எட்டாவது வயது வரை பள்ளியில் படித்து வந்தார்.   இவருடைய பெற்றோர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக அடிக்கடி இடம் மாறுவதால் இவருடைய படிப்பு தடைபட்டு வந்தது.   பிறகு அவர் தனது படிப்பை நிறுத்தி விட்டு தனது கூட்டத்தாரைப் போல் பாசிமணிகளை விற்றும்,  சில நேரங்களில் பிச்சை எடுத்தும் வாழ்க்கையை நடத்து உள்ளார்.

கடந்த 2014ஆம் வருடம் அவருடைய வாழ்வில் ஒரு மாற்றம் உண்டானது.   அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் (அனத்துக் குழந்தைகளுக்கும் கல்வி திட்டம்) இவரை ஒரு தொண்டு நிறுவனம் பள்ளியில் சேர்த்தது.   முதலில் பள்ளிக்குச் செல்வது சக்திக்கு கடினமாக இருந்தாலும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கத் துவங்கினார்.  பிறகு அவர் பூங்காவனம் என்னும் இடத்தில் உள்ள பயிற்சி மையத்துக்கு மாற்றப்பட்டார்.

இந்த மையத்தில் ஆசிரியர்கள் பள்ளிப் படிப்புடன் சுத்தம், சுகாதாரம் ஆகியவை பற்றியும் சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.   இங்கு சென்ற சக்தி கொஞ்சம் கொஞ்சமாக தனது பழைய வாழ்க்கையில் இருந்து மாறி சுத்தம் மற்றும் நேர்த்தியாக உடை உடுத்துவதை கற்றுக் கொண்டார்.   அது அவருக்குப் பிடித்துப் போகவே தனது வீட்டு மக்களுக்கும், தனது கூட்டத்தினருக்கும் அதை கற்பிக்க ஆரம்பித்தார்.   தான் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு செல்லும் போது மற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் தான் நல்ல வாழ்க்கை வாழ்வதாகவும்,  அதே போல மற்றக் குழந்தைகளையும் கல்வி கற்க அனுப்ப வேண்டும் என தூண்டுவார்.

சிறிது சிறிதாக அந்த நாடோடி நரிக்குறவர் வகுப்பை சேர்ந்த குழந்தைகளை கல்வி கற்க பெற்றோர்கள் அனுப்பி வைக்க ஆரம்பித்தனர்.    இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும்  அந்த மக்களை சம்மதிக்க வைக்க தாம் பெரும்பாடு பட்டதாகவும் சக்தி கூறுகிறார்.   தற்போது இவர் தூண்ட்டுதலின் பேரில் 25 பேரை கல்வி நிறுவனத்தில் இணைத்துள்ளார்.   இன்னும் இணைக்க முயலுவதாக இந்த 12 வயதே ஆன சாதனையாளர் சக்தி தெரிவிக்கிறார்.

இந்த வருடத்துக்கான சர்வதேச அமைதி விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள குழந்தைகளில் சக்தியும் ஒருவர்.   அந்த குழந்தைகளில் மிகவும் வயது குறைந்தவர் சக்தி.  இந்த விருது இதற்கு முன்பு நோபல் பரிசு பெற்ற மலாயாவுக்கு வழங்கப்பட்டிருந்தது.   அதே போல் குழந்தைகளின் உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் என்னும் முறையில் சக்தி சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் சக்தியிடம் இது பற்றி கேட்டபோது அவருக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை.  அவர், “எனக்கு விருது பற்றி எல்லாம் தெரியவில்லை.  எனக்கு தேவை என் கூட்டத்தில் உள்ள அனைத்து நண்பர்களும் கல்வி கற்று என்னைப் போல் ஆக வேண்டும் என்பது தான்.   எனது லட்சியம் எல்லாம் படித்து நிறைய சம்பாதித்து என் தாயார்க்கு ஒரு ஏ சி கார் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான்” என குழந்தைத்தனம் மாறாமல் கூறுகிறார்.

News and Pictures courtesy  :THE NEWS MINUTE