சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு, ஆகஸ்டு மாதம் கவிழும் வாய்ப்பு உள்ளது என முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவரும், மாட்டுத்தீவன ஊழல் உள்பட பல ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்ற ஜாமினில் வெளியே உள்ள லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைக்கான தேர்தலில் எந்தவொரு கட்சியும் மெஜாரிட்டி பெறாத நிலையில், 240 இடங்களை கைப்பற்றிய பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து 99 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இருந்து வருகிறார்.
இந்த நிலையில், பீகார் மாநில முதல்வரான லாலு பிரசாத் யாதவ், தனது கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் துவக்க நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு பேசும்போது, மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு பலவீனமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். வரும் ஆகஸ்டில்கூட கவிழலாம். கட்சித் தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.
பீகாரில் இருந்து புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரும்பாலான தலைவர்கள் கலந்துகொண்ட நேரத்தில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 12 எம்.பி.க்கள் உள்ளனா். ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு (16 எம்.பி.க்கள்) அடுத்தபடியாக பாஜக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.