பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெங்களூருவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ எந்த பிரதமரும் செய்யாத வகையில் எதிர்கட்சியினர் குறித்து கருத்து தெரிவிக்க பிரதமர் அலுவலகத்தை மோடி பயன்படுத்துகிறார். இது பிரதமர் பதவிக்கு தகுதி குறைவான செயலாகும். இது நாட்டிற்கு நல்லது கிடையாது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் வங்கிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைத்துள்ளது.
சமீபத்தில் பல மாநில ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது இதற்கு உதாரணமாகும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவை பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இதனால் பல தொழிலாளர்கள் பணியை இழந்தனர். நிரவ் மோடி விவகாரத்தில் மோடி அரசு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.