நாகர்கோவில் :
ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் மத்திய அரசுக்கு ஏற்படும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் ஆவேச பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு போட்டியாக டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் விழா நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் டி.டி.வி தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார். விழாவில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
“திராவிட இயக்கத்தை வீழ்த்த சினிமா பிரபலங்களை அரசியலுக்கு அழைத்து வருகிறார்கள். அதற்கு தெரிந்தோ, தெரியாமலோ மோடி அரசு ஆதரவு அளிக்கிறது. ஆனால் அது அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது. இளைஞர்களை வசீகரிக்கும் தலைவராக டி.டி.வி தினகரன் வீற்றிருக்கிறார்.
நேதாஜி, அறிஞர் அண்ணாவுக்கு கிடைக்காத இளைஞர் படை இன்று தினகரனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் நம்பிக்கையாக தினகரன் இருக்கிறார்.
தமிழக அரசு இன்று நீதிமன்ற படிக்கட்டில் குற்றுயிராக கிடக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் முடிந்துவிடும் நிலையில் இருக்கிறது. அமைச்சர்கள் தமிழகத்தில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு ஆதரவு இல்லை. துரோகத்திற்கு நீண்டநாள் விளம்பரம் கிடைக்காது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று தினகரன் கூறினார். அதன்படி வெற்றிபெற்றும் காட்டினார். சின்னத்தை முடக்கினாலும் அவர் வென்றுகாட்டினார்.
வெற்றிக்கு சின்னம் முக்கியம் அல்ல; செல்வாக்குதான் முக்கியம்.
சர்வாதிகாரி ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் மத்திய அரசுக்கு ஏற்படும்.
எங்களுக்கு எத்தனை ஆபத்து வந்தாலும் அதை எதிர்கொள்வோம். எங்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டு இருக்கிறது. அதை நாங்கள் முறியடித்து விரைவில் வெற்றி பெறுவோம்.
ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்த அறிவிப்பை அதே சமூகத்தை சேர்ந்த மந்திரி மூலமே அறிவிக்க செய்தது வேதனை.
இந்தியாவில் உள்ள 25 கோடி சிறுபான்மை மக்கள் இன்று அச்சத்தின் பிடியில் தவிக்கிறார்கள். கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்தியாவின் பொருளாதார நிலை தள்ளாடுகிறது. ஆனால் இதை எல்லாம் எதிர்த்து யாரும் பேச முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலை விரைவில் மாறும்” என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.
இந்த நிலையில், “மத்திய அரசு என்பது பிரதமர் மோடி தலைமையிலானது. ஆக ஹிட்லர் முடிவு என நாஞ்சில் சம்பத் சொல்வது பிரதமர் மோடியைத்தான். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று பா.ஜ.கவினர் சமூகவலைதளங்களில் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.