நன்றிக்கடன்

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

அந்த அப்பார்ட்மென்ட்டில் உள்ள அத்தனை ஜன்னல்களிலும் மனிதத் தலைகள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தன.

தரைத்தளம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி வண்டிகள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தன.

வேண்டுமென்றே சில அப்பார்ட்மெண்ட் வாசிகள் கீழே அங்குமிங்கும் நடந்தார்கள், அவர்களிடம் சில டி.வி. சேனல்கள் பேட்டியெடுத்தார்கள்.

“சார், நீங்க இந்த அப்பார்ட்மெண்ட் வாசி தானே ?”

“ஆமாம் சார்”

“இன்று இறந்த நடிகர் ரிஷி எப்படி உங்களிடம் பழகுவார் ?”

“ரொம்ப நல்ல மனிதர், அதிகம் வெளியில் வரமாட்டார், வந்தால் அனைவரிடமும் புன்னகைத்துப் பேசுவார்” என்றார் ஒருவர்.

மற்றொருவர் என்னுடன் “தினம் நடைப்பயிற்சி செய்வார்” எனக் கூறினார் (உண்மையில் ரிஷி அவனுடைய வீட்டை விட்டு வெளியே வரமாட்டான்)

மதிய நேரமாகி விட்டது, ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த அந்த பிரபலம் வரவில்லை, அவள் வேறு யாருமில்லை நடிகை ரமி. அதற்கு காரணமும் உண்டு

நடிகர் ரிஷி 20 வருடங்களுக்கு முன்பு மிகப் பெரிய சினிமா ஸ்டார், அவனுக்கு இருந்த மார்க்கெட் இதுவரை யாருக்கும் இல்லை என்று இப்போது வரை பேச்சு உண்டு.

ரசிகர் மன்றங்கள் அவன் சொல்லுக்காக காத்து நின்றன, பல அரசியல் கட்சிகள் அவனை வளைத்துப்போட வட்டமிட்டன, கோடிக்கணக்கில் பணம் விளையாடியது, ரிஷியின் கரங்களில்

அப்போது, அதாவது ஒரு 15 வருடத்திற்கு முன்பு ரமியை அறிமுகக் கதாநாயகியாக்கி விட்டு ரிஷி படம் நடித்தான், அந்தப்படம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது, அடுத்ததாக இருவரும் சில படங்களில் ஜோடி சேர்ந்தனர், அத்தனைப் படங்களும் வசூலை அள்ளியது, ராசியான ஜோடி எனப் பெயர் வாங்கினார்கள் காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொண்டார்கள்.

என்ன நேரமோத் தெரியவில்லை ரிஷியும், ரமியும் திருமணம் செய்த நாளில் இருந்து அவர்களுக்கு எதுவும் சரி வரவில்லை.

வரிசையாக ரிஷியின் படங்கள் படுதோல்வியை சந்தித்தது, அவனும் மது, கிளப் என தன் நேரத்தை வீணடித்தான், சினிமாத்துறையில் அவன் பெயர் கெட்டு சரசரவெனக் கீழே இறங்கினான்.

அவனின் மனதிற்குள் ரமியைத் திருமணம் செய்ததால் தான் தனக்கு இப்படி ஒரு இறங்கு நிலை என எண்ணிக் கொண்டு அவளை தினமும் திட்டுவது, அடிப்பது என இருந்ததால் அத்திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை, இருவரும் விவாகரத்து பெற்றார்கள் பின் ஓரிரு வருடங்கள் கழித்து ரிஷி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

ஆனால் அதே ஓரிரு வருடங்கள் கழித்து ரமி திரும்பவும் திரைத்துறைக்கு வந்தாள், அனைவரிடமும் மரியாதை, தொழில்பக்தி, படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வருவது, நல்ல பாத்திரங்களை தேர்வு செய்தல் என கவனம் செலுத்தினாள், அதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளாக அவள் தமிழ்த் திரையுலகில் முடிசூடா ராணியாக வலம் வந்தாள்.

அத்தனைப் பெரிய ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் இவளின் கால்ஷீட்டிற்குக் காத்திருந்தனர். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரெடுத்தாள், ஆனால் அந்த காலகட்டத்தில் ரிஷி எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடந்தான். ரமியின் வளர்ச்சியைப் பார்த்து அதிசயப்பட்டான்.

வீட்டினுள்ளே இருந்தது அவனுக்கு நோயை வரவைத்துவிட்டது, இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அவன் மனைவி மேகலை, ரிஷிக்கு வைத்தியம் பார்த்தாள், ரிஷியின் சொத்தும் கரைந்தது, அவன் உயிரும் கரைந்து விட்டது.

அன்று சாயங்காலம் ரிஷியின் இறுதி ஊர்வலம் வரை நிறைய டிவிக்காரர்கள் காத்திருந்தனர், எல்லா நடிகர், நடிகைகளும் வந்தனர் ஆனால் ரமி மட்டும் வரவில்லை.

ரமியின் கணவன் மிகப்பெரும் தொழிலதிபர், அவளை ராணி அந்தஸ்த்தில் வைத்திருக்கிறான் அவன் அங்கு வர அனுமதிக்க வில்லையோ என அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளும், பொதுமக்களும் பரவலாகப் பேசிக்கொண்டனர்.

ரிஷி இறந்து 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் ஊரடங்கிய பிறகு இரவு ஒரு மணிக்கு மேல் நடிகை ரமி தன் உதவியாளர் பெண்ணுடன் ரிஷியின் வீடு தேடி வந்தாள்.

அவளைக் கண்டதும் மேகலை கண்ணீருடன் வரவேற்றாள், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்ப சென்றாள்.

வேணாம் மேகலை, எழுப்பாதே குழந்தைகளுக்கு நம் சம்மந்தப்பட்ட விஷயம் எதுவும் தெரியவேண்டாம்.

சரிங்க ரமி,  

வாங்க, அவர் போட்டோவை கும்பிடுறீங்களா ரமி ?

ப்ச், வேண்டாம் மேகலை,

உட்கார, எனக்கு நேரமில்லை, உன்னைப் பார்த்துப் பேசிவிட்டு போகதான் வந்தேன் மேகலை

சொல்லுங்க ரமி

இனி என்ன பண்ண போற மேகலை ?

என்ன செய்யறதுன்னு தெரியலைங்க ரமி, கடைசியாக இருந்த இந்த வீட்டையும் இப்ப அடகுல வச்சி தான் அவருக்கு வைத்தியம் பார்த்தேன் அதனால இதையும் இப்ப காலி பண்ணிட்டு, ஏதாவது வாடகை வீடு பார்க்கணும் ரமி.

சரி அப்புறம்

எனக்கு பியூட்டிசியன் தெரியும், அந்தக்கடை வைக்கப் போறேன், அதை வச்சிக் குழந்தைகளை பார்த்துக்குவேன் ரமி என கண் கலங்கினாள்.

ம், சரி மேகலை, இப்பக்கூட நான் ஒரு விளம்பர சூட்டிங் முடிச்சிட்டு வர்ற வழியில் தான் உன்னைப் பார்க்க வந்தேன், நான் வந்தது என் கணவருக்கோ வீட்டுக்கோ தெரியாது, மனசு கேக்கல அதான் வந்தேன்.

அப்படியா ?

ஆமாம், என்னதான் இருந்தாலும் என் கணவரும் ஆண் வர்க்கம் தானே அவருக்கு என் முதல் கணவர் வீட்டிற்கு நான் துக்கம் விசாரிக்க வந்தால் பிடிக்காது இல்லையா ? அதனால் தான் அன்று நான் வரல, சரி போகட்டும் பெண்கள் நிலை எல்லா மட்டத்திலும் இதுதான் என்றுக் கூறிவிட்டு,

தன் அருகில் இருந்த உதவியாளரிடம், வனிதா அந்த டாக்குமெண்ட் எடு என்றாள்.

அதைக் கையில் வாங்கிய ரமி மேகலையிடம் கொடுத்தான்.

இந்தா, மேகலை இந்த வீட்டின் பத்திரம், நான் பணம் தந்து வீட்டை மீட்டு விட்டேன், பத்திரமா வைத்துக்கொள், குழந்தைகளைப் பார்த்துக்கொள், என்று சொல்லிவிட்டு, தன் கைப்பையிலிருந்து சில லட்சங்களை அவளது கையில் கொடுத்து,

உன் சொந்தக் காலில் நில்லு சீக்கிரம் பார்லர் ஆரம்பி, நல்லாயிரு என சொன்னாள்.

ரமி ஒரு நிமிடம், கடைசி நாட்களில் உங்களைக் கொடுமைப் படுத்தியதை நினைத்து வருந்தினார் அவர் என சொன்னாள் மேகலை

இருவரும் ஆரத்தழுவிக் கண்ணீருடன் விடை பெற்றனர் அப்போது அங்கிருந்து அடுத்த அறையில் ரிஷியின் போட்டோவின் கீழ் லைட் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து ரமி இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டாள்.

வரேன், என செல்போன் எண்ணைக் கொடுத்து விட்டு வேகமாகப் படியிறங்கி சென்றாள்.

காரை ஒட்டிய வனிதா, மேடம் தப்பா எடுத்துக்காதீங்க, உங்ககூட 10 வருஷமா இருக்கேன், ரிஷியைப் பத்தி பேசினாலே கோபம் வரும் ஆனா இப்ப அவங்களுக்கு உதவி செய்யறீங்க.

வனிதா, அது எனக்கான முதல் காதல் அந்த நினைவு உடல் மண்ணுக்குப் போகும் வரை இருக்கும், அந்த ஏமாற்றம் என்னை அப்படி பேச வைத்தது.

ஆனால் நான் இப்போது செய்தது நன்றிக்கடன், 18 வயதில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தேன், யாரும் வாய்ப்பு தரவில்லை, ஆனால் ரிஷி என் ஏழ்மை நிலை பார்த்து வாய்ப்பு தந்தார், அந்த அறிமுகம் தான் இன்றுவரை நான் இந்த களத்தில் நிலைத்து நிற்கிறேன், அதற்குக் காரணம் அவர் தந்த வாய்ப்பு அதற்கான நன்றிக்கடன் இது அவ்வளவுதான் என கண் கலங்கியவாறே தன், பயணத்தைத் தொடர்ந்தாள் ரமி.