சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் அருகே 100 கோடி ரூபாய் செலவில் ‘நந்தவனம் பாரம்பரிய பூங்கா’ எனும் மெகா திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

223 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த பூங்கா மகாபலிபுரம், கோவளம் கடற்கரை, புதுச்சேரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு மற்றொரு சுற்றுலாத்தலமாக அமையவிருக்கிறது.

நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமையவுள்ள இந்த பூங்காவில் 2 நட்சத்திர விடுதிகள், சுமார் 4,000 வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கான அரங்கங்கள், நடைபாதைகள், படகு சவாரி, திறந்தவெளி திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளது.

சோலைவனம், விஹாரம், மைதானம் என்ற மூன்று பிரிவுகளாக அமைய உள்ள இந்தப் பூங்காவின் மூலம் கிட்டத்தட்ட சுமார் 10,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு உருவாகும்.

தமிழக கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக அமையவிருக்கும் இந்த பூங்காவிற்கு ஆறு நுழைவு மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளது.

தவிர, பூங்காவில் இருந்து கடற்கரைக்கு செல்லும் இரண்டு சாலைகளும் கடைத்தெருக்களாக அமைய உள்ளது.

இந்த பூங்கா செயல்பாட்டிற்கு வரும் போது மிகச்சிறந்த துணைப் பொழுதுபோக்கு மையமாக செயல்படும் என்றும் சுற்றுலாப் பயணிகளையும் அதிக அளவில் ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது.