மும்பை:

நாடு முழுவதும் 3 கோடி முஸ்லிம்கள் உட்பட 12.7 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், பின்னணியில் பாஜக இருப்பதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி பிஜி. கோல்சே குற்றஞ்சாட்டியுள்ளார்.


ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் சர்வேயை மேற்கோள்காட்டி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பிஜி. கோல்சே பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்ட்டிர மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 39,27,882 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் 17 லட்சம் தலித்துகள், 10 லட்சம் முஸ்லிம்கள் அடங்குவர்.

அரசியல் லாபத்துக்காக நடைபெற்ற இந்த வாக்காளர் பெயர்கள் நீக்க பின்னணி சதியில் பாஜக உள்ளது.

இந்த சர்வேயை ஐடி என்ஜினியரும் வோட்டர் ஆப் நிறுவனர் காலித் ஷாய்ஃபுல்லா என்பவர் மேற்கொண்டார். நாடு முழுவதும் 12.7 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதையும், இதில் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் மட்டும் 3 கோடி அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் வரும் 2019 மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாது. இவரது குழுவினர் மகாராஷ்ட்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 69 மக்களவை தொகுதிகளில் சர்வே நடத்தியதில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இந்த தவறை திருத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.

இவ்வாறு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலர் மற்றும் ஓய்வு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பிஜி. கோல்சே பாட்டீல் கூறினார்.

இது குறித்து சாய்ஃபுல்லா கூறும்போது, விடுபட்ட வாக்காளர் பெயர்கள் விவரம், ஒரு தெருவில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாக்குகள் விவரம் வோட்டர் ஆப்பில் உள்ளது என்றார்.