பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
“உலகின் மிக பழமையான இந்த பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் அமைக்கப்பட காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம்” என்று நிதிஷ் குமார் கூறினார்.
முன்னதாக இந்த பல்கலைக்கழகத்தை கட்டமைத்த மொத்த பெருமையையும் மோடி அரசு தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் புதிய வளாக திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி முன் நிதிஷ் குமார் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பௌத்த மதத்தின் முக்கிய அடையாளமாக கி.பி. 5 முதல் 13ம் நூற்றாண்டு வரை செயல்பட்டு வந்த நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. 1200ல் அழிக்கப்பட்டது.
10000 மாணவர்கள் 2000 ஆசிரியர்கள் என 20 முதல் 25 கி.மீ. சுற்றளவில் பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பௌத்த பல்கலைக்கழகமாக பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்து வந்தது.
இந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் கட்டியமைக்க வேண்டும் என்று 2005ம் ஆண்டு முதல் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது, தவிர 18 நாடுகள் அடங்கிய கிழக்கு ஆசிய நாடுகளும் இதை வலியுறுத்தியது.
அதேவேளையில் 2006 மார்ச் மாதம் பீகார் வந்த அப்போதைய ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்ட நிலையில் 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் 485 ஏக்கரில் புதிய வளாகம் அமைக்கும் பணி துவங்கியது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இதற்கான முன்னெடுப்பை செய்தது” என்று புதிய வளாக திறப்பு விழாவில் நிதிஷ் குமார் பேசினார்.
பிரதமர் மோடியின் மைனாரிட்டி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், மோடி முன்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முயற்சி குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.