மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்த நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக, மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், வன்கொடுமை சட்டம் போல தனி சட்டத்தை கொண்டு வரவேண்டும் என கோரி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி பேசும்போது, ராஜாக்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்க சில தெலுங்கு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரது குடும்பத்தினர் தெலுங்கு பேசுபவர்கள், என்பதால் கஸ்தூரி பேசிய விவகாரம் விவாதப்பொருளாக மாறியது.
இதுகுறித்து இன்று (05/11/24) காலையில் விளக்கம் தெரிவித்த நடிகை கஸ்தூரி, தனது பேச்சுக்களை திரித்து சிலர் காணொளி வெளியிட்டதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் பெருவாரியாக தெலுங்கு மக்கள் இருக்கிறார்கள். என் புகுந்த வீடு தெலுங்கு பேசும் ஒரு வீடு. என் மகள்களுக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் இரண்டு கண்களாக மதித்து வளர்ந்து வருகிறார்கள். நான் தமிழச்சி… ஆனால் இங்கே இனவாதத்தை நான் பேசவில்லை. எனக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரம் இது. தெலுங்கு இனத்தையோ, தெலுங்கு மக்களையோ நான் தவறாக பேசவில்லை. அது திரித்து பரப்பப்படுகிறது. எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன்; இதற்கு அச்சப்படமாட்டேன்.
தமிழர்களை, தமிழர்கள் இல்லையென்று சொல்லக்கூடிய திராவிட மாடல், திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நாங்கள் சொல்கிறோம். தெலுங்கர்களை பற்றி நான் பெருமையாக தான் பேசினேன். பிராமணர்கள் மீது மட்டும் ஏன் வன்மம் காட்டப்படுகிறது. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடமளிக்காதது ஏன்?. பிராமணர்களை அவதூறாக பேசும்போது எங்கே சென்றீர்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சின் காரணமாக தெலுங்கு பேசும் 2 கோடி மக்கள் வேதனை அடைந்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆம் தேதி பிராமணர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு சமூதாய பெண்களை இழிவு சொல்லுடன் அந்த கூட்டத்தில் பேசி இருப்பதாகவும். இது தேவையில்லாமல் இனப்பிரச்சனையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் வகையில் உள்நோக்கத்தோடு நடந்த செயல் என கூறப்பட்டது. கஸ்தூரியின் பேச்சு, தெலுங்கு பேசும் 2 கோடி மக்களை வேதனை அடைய வைத்துள்ளதாகவும், அவர் பின்புலத்தில் யார் செயல்பட்டார்கள் என்பதும் தெரிந்து கொண்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சட்ட ஒழுங்கை சீர் கெடுக்கும் வகையில் இது போன்று பேசி இருக்கிறார். விளம்பரத்தை தேடுவதற்காக இது போன்று பேசினாரா அல்லது தொடர்ந்து இச்சமூக மக்களை இழிவு படுத்துவதற்காக பேசினாரா என்பதை ஆராய்ந்து அதற்கான நனவாடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வருகின்ற 10ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மிக பெரிய அளவில் தெலுங்கு இன மக்களை வைத்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.