நாக்பூர் வகுப்புவாத கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஃபஹீம் கானுக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் நகர காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில், பாஹிம் கானின் வீட்டின் அங்கீகரிக்கப்படாத ஒரு பகுதி இடிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

நாக்பூரின் யசோதரா நகர் பகுதியில் உள்ள சஞ்சய் பாக் காலனியில் உள்ள வீடு ஃபஹீமின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலேகானைப் பூர்வீகமாகக் கொண்டவரும் உள்ளூர் அரசியல் தலைவருமான ஃபஹீம் கான், கடந்த வாரம் தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி வலதுசாரி அமைப்புகள் (விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம்) சமீபத்தில் போராட்டங்களை நடத்தின.

மார்ச் 17 அன்று நாக்பூரின் மஹால் பகுதியில் உள்ள சிட்னிஸ் பூங்காவில் நடந்த போராட்டம் தொடர்பாக பரவிய தகவலால் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் காவல்துறையினர் மீது கற்களை வீசியதுடன், சில இடங்களில் பெட்ரோல் குண்டுகளையும் வீசியது.

பின்னர் ஹன்சாபுரி பகுதியில் வன்முறை வெடித்தது. கோபமடைந்த கும்பல் பல வாகனங்களுக்கு தீ வைத்தது. அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் தீக்கிரையாக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வன்முறையில் மூன்று துணை காவல் ஆணையர்கள் உட்பட 33 காவல்துறையினரும், ஐந்து பொதுமக்களும் காயமடைந்தனர்.

“நாக்பூர் வன்முறையில் சேதமடைந்த பொது சொத்துக்களின் இழப்பு கலவரக்காரர்களிடமிருந்தே மீட்கப்படும்.” “அவர்கள் பணம் செலுத்தவில்லை என்றால், பணத்தை மீட்க அவர்களின் சொத்துக்கள் விற்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும்” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

வன்முறைக்குப் பிறகு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூருக்குச் சென்று ஆய்வு செய்தது இதுவே முதல் முறை.

“நிலைமையை மோசமாக்குவதில் ஈடுபட்ட 68 சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.” அத்தகைய பதிவுகளைப் பகிர்பவர்களும் குற்றம் சாட்டப்படுவார்கள். “வன்முறையில் வெளிநாட்டினர் அல்லது வங்கதேசத்தினரின் தொடர்பு குறித்து இப்போது நாங்கள் எதுவும் கூற முடியாது” என்று உள்துறை அமைச்சராகவும் இருக்கும் ஃபட்னாவிஸ் கூறினார்.