சென்னை

காங்கிரஸ் கட்சி பெண்கள் அமைப்பு தலைவரும்,  நடிகையுமான நக்மா,  ரஜினியும் கமலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.    இருவரும் இணைந்து செயல்படுவார்களா என்னும் கேள்விக்கு ரஜினிகாந்த் காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.   கமலஹாசன் ரஜினிகாந்த் அரசியலில் காவி நிறம் தெரிவதால் அவர் அதை விடும் வரை கூட்டணி அமைக்க மாட்டேன் எனக் கூறி இருந்தார்.

இன்று சென்னையில் மகிளா காங்கிரஸ் அமைப்பின் தலைவியும் நடிகையுமான நக்மாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.   அப்போது நக்மா, “தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணக்கம் காட்டியும் தமிழகத்துக்கு எந்த ஒரு நலத்திட்டமும் செயல் படுத்தப் படவில்லை.   தமிழகத்தில் பெரும்பாலான துறைகள் தோல்வி அடைந்துள்ளது.

நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.   இவர்களும் விதி விலக்கு அல்ல.   ஆனால் கமல் – ரஜினி இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல இயக்கத்துடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்”  என கூறினார்.