மைசூர், தலைக்காடு, சிவபெருமான் ஆலயம்
மைசூர் அருகில் தலைக்காடு என்ற இடத்தில் சிவபெருமான் கோயிலொன்று உள்ளது. இங்கே சிவபெருமான் #வைத்தியநாதன் என்ற பெயரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். முற்காலத்தில் “சோமதத்தர்” என்ற முனிவர் கைலாய பதவியைப் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி வழிபட்டாராம். இவரது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘சோமதத்தனே! #கஜாரண்யம் என்னும் காட்டிற்கு சென்று என்னை பூஜித்து வந்தால் உன் எண்ணம் நிறைவேறும், என்றாராம்.
ஆனால் முனிவரால் தவம் செய்ய முடியாதவாறு யானைகள் இடையூறு செய்யவே, முனிவரும் ஒரு யானையாக மாறி அக்காட்டில் தவம் செய்தாராம். ஒருநாள் *தலா, *காடன் என்னும் இரண்டு வேடர்கள்,யானை என நினைத்து முனிவரைப் பிடிக்க குறி வைத்தனராம். ஆனால், குறி தவறிய அம்பு அருகிலுள்ள புற்றில் பாயவே அதிலிருந்து இரத்தம் பீறிட்டதாம். அப்போது அசரீரியாக, ‘வேடர்களே! இந்த புற்றில் லிங்க வடிவில் நான் இருக்கிறேன். அம்புபட்ட என் மேனியில் ஏற்பட்ட காயம் தீர மூலிகை மருந்திடுங்கள்’ என்றாராம் சிவபெருமான்.
வேடர்களும் அப்படியே செய்ய, #சிவபெருமான் நேரில் காட்சியளித்து வேடர்களுக்கும், யானையாக இருந்த முனிவருக்கும் கைலாய பதவியளித்தாராம். சிவபெருமான் இத்தலத்தில் #வைத்தியநாதராக வீற்றிருக்கிறார். புற்றில் இருந்து சுயம்புவாக தோன்றியதால், இங்கே சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. சிவலிங்கத்தின் பாணத்தில் சிவபெருமானின் முகம் கவசமாக உள்ளது. ஐந்து தலை நாகாபரணத்தை சூடியிருக்கும் இவரை தரிசித்து தீர்த்தத்தைக் குடித்தால், நீண்டகால நோயும் தீரும். #மிருத்திகா என்னும் புற்றுமண் இங்கே பிரசாதமாக தரப்படுகிறது.
பெருமாள் கோயில் போல தலக்காடு வைத்தியநாதர் கோயிலில் “சொர்க்க வாசல்” உள்ளது. எனவே இங்கே வந்து சிவபெருமானை வழிபடும் பகதர்களின் தலையெழுத்து மாறி, நல்வாழ்வு அமையும் என்பது ஐதீகம். கோபுர வாசல் தவிர “கைலாய வாயில்” எனப்படும் சொர்க்கவாசலும் இக் கோயிலில் உள்ளது. பொங்கலன்று சுவாமியும், அம்பாளும் காளை வாகனத்தில் இராஜகோபுரத்தின் வழியாக உலா செல்வர். கோயிலுக்கு திரும்பும் போது சொர்க்க வாசல் வழியாக உள்ளே நுழைவர்.
அம்பிகை #மனோன்மணி என்ற பெயரில் இரு கைகளில் தாமரை மலரைத் தாங்கி நிற்கிறாள். சக்தி கணபதி, பத்ரகாளி, கமடேஸ்வரர், அபய வெங்கட்ரமணர், மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
பஞ்சபூதங்களைக் குறிக்கும் பஞ்சலிங்க சந்நிதி வெளிப்பிரகாரத்தில் உள்ளது. சொர்க்கவாசலுக்கு எதிரே சுதையால் ஆன நந்தி உள்ளது. கோயிலில் சிற்பியாகப் பணியாற்றிய நாககுண்டலாச்சாரி தன் பெயரைக் குறிப்பிடும் விதத்தில் பாம்பாலான கல் சங்கிலியை உருவாக்கி உள்ளார். கோயில் அருகில் “கல்யாணி தீர்த்தம்” உள்ளது.
தலக்காட்டைச் சுற்றி காவிரியாறு நான்கு திசைகளிலும் வளைந்து திரும்புகிறது. இவ்வூரின் கிழக்கில் சூரியன் வழிபட்ட அர்க்கேஸ்வரர், மேற்கில் #அர்ஜுனன் வழிபட்ட #மல்லிகார்ஜுனேஸ்வரர், வடக்கில் பிரம்மா வழிபட்ட #சைகதேஸ்வரர், தெற்கில் வாசுகி வழிபட்ட #ஆலோசகர்கள் பாதளேஸ்வரர் கோயில்கள் உள்ளன. நடுவில் தலக்காடு வைத்தியநாதர் கோயில் உள்ளது.
மூலவர் சந்நிதி நுழைவாயிலின் இருபுறமும் நந்தி, மகாகாளர் என்னும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. நந்தி ஆண் கல்லினாலும், மகாகாளர் பெண் கல்லினாலும் வடிக்கப்பட்டுள்ளனர். நந்தியைத் தட்டினால் ‘கண்டநாதம்’ என்னும் மணியோசையும், மகாகாளரைத் தட்டினால் ‘தாளநாதம்’ என்னும் இனிய ஓசையும் கேட்கும். சிற்பக்கலைக்கு சான்றாக இது விளங்குகிறது.
இக்கோயிலில் #விஜயகணபதி என்ற பெயரில் விநாயகர், குதிரையின் மீது போர் வீரர் போல வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். கல்வி முன்னேற்றத்துக்காக செம்பருத்திப்பூ வைத்து மாணவர்கள் வழிபடுவது இங்கே வழக்கம். இந்த குதிரை வாகனத்தின் கால்களை மறைத்து விட்டு பார்த்தால் மூஞ்சூறு போல காட்சி தருவது அதிசயமே.
மானிடர்களின் தலையெழுத்தையே மாற்றும் கருணைக்கடலே! சிவபெருமானே! உனது பக்தர்களுக்குத் தீராத மனவேதனையைத் தரும் மனச்சாட்சியற்ற கொடியவர்களுக்கும் தக்கத் தண்டனையை அளித்திடுவாயே! கருணாமூர்த்தியே! உமாபதியே! பரமேஷ்வரனே! சரணம்!