மதுரை
மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேமாலூரை சேர்ந்த கு.புகழேந்தி 50 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவில் வேலை தேடி குடியேறினார். மைசூரு தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்த புகழேந்தி, 2013-ல் தமிழ்ச் சங்கத் தலைவரானார். இவர் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
புகழேந்தி கடந்த 10 நாட்களாக மதுரையில் தங்கி சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி புகழேந்தி காலமானார். அவரது உடல் அவர் சொந்த ஊரான மேமாலூருக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
மரணமடைந்த புகழேந்திக்கு ரோஜாவதி என்னும் மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அனைத்திந்திய தமிழ்ச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.ராசன் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் புகழேந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.