தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக உங்கள் விரலில் வைக்கப்படும் ‘மை’யை அத்தனை சுலபத்தில் அழித்து விட முடியாது.
கோகோ கோலா குளிர்பான தயாரிப்பு போன்று-இந்த ‘மை’ தயாரிப்பும் பரம ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
சுமார் 90 கோடி பேரின் விரலில் கரும் புள்ளி வைக்கும் இந்த கறுப்பு சாயம் குறித்த சில புள்ளி விவரங்களை அறிவோமா?
இந்த மை மைசூரில் உள்ள ‘மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு நாடு முழுக்க சப்ளை செய்யப்படுகிறது.இப்போது கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தை கடந்த 1937 ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர்-கிருஷ்ணராஜ வாடியார். மைசூரின் முன்னாள் மன்னர்.
மக்களவை தேர்தலோ –சட்டசபை தேர்தலோ அல்லது உள்ளாட்சி தேர்தலோ –எந்த தேர்தலாக இருந்தாலும் –இந்த நிறுவனத்தில் இருந்து தான் இந்திய தேர்தல் ஆணையம் ‘மை ‘ வாங்குகிறது.
இந்த ஆண்டு 26 லட்சம் மை குப்பிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு குப்பி மையில் 700 பேருக்கு புள்ளி வைக்கலாம்.
மை தயாரிக்கும் ஆலை- மைசூரு நகரின் மையப்பகுதில் உள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தொழிலாளர்கள் இரண்டு ‘ஷிப்டாக’ வேலை பார்த்து பெரும்பாலான மாநிலங்களுக்கு மை குப்பிகளை அனுப்பி விட்டனர்.
1962 ஆம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் இந்த ஆலையின் மையே பயன்படுத்தப்படுகிறது. மை வாங்க தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு ஒதுக்கியுள்ள தொகை- 33 கோடி ரூபாய்.
பல வெளிநாட்டு தேர்தல்களிலும் இந்த மையே பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
டெல்லியில் உள்ள தேசிய ரசாயண ஆராய்ச்சி நிலையம் அளித்த ஆலோசனையின் படி- சில ரசாயணங்களை கலந்து –இந்த ‘மை’ உற்பத்தி செய்யப்படுகிறது.
—பாப்பாங்குளம் பாரதி