சென்னை: பிரசித்தி பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்  அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் பக்தர்கள் மயிலையில் கூடி உற்சாகமாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.  அதிகாலையில் சர்வ அலங்காரத்தில் தேரில் ஏறிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது .பல ஆயிரம் பக்தர்கள் திருத்தேர் வடத்தை பிடித்து இழுத்து, கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் ஆசியை பெற்றனர்.

இதையடுத்து பங்குனி விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று காலை  காலை 10.30 மணிக்கு திருஞான சம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடந்தது.

அதன் பிறகு மாலை 3மணி அளவில்  அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதியுலா  தொடங்கி நடைபெற்று வருகிறது. 63 நாயன்மார்கள் புடை சூழ விநாயகர் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை, முருகன் ஆகியோர் வீதியுலா வருகின்றனர்.

கேடயம் என்னும் விமானங்களில் ஒன்றுக்கு நான்கு பேர் வீதம் 18 விமானங்களில் 63 நாயன்மார்களும் பவனி வருகின்றனர். இந்த விமானங்களுடன் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேரும் தனித்தனியாக பெரும் பல்லக்குகளில் உடன் வருகின்றனர்.

அறுபத்துமூவர் விழாவையொட்டி, சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் மயிலையில் குவிந்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தார், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர் மோர், இனிப்புகள் வழங்கி வருகின்றனர்.

அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழா இரவு 11 மணிக்கு மேலும்  நீடிக்கும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.