நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்த, ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உட்பட 114 பேர் உயிரிழந்தனர்.

மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து, ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சி கட்சியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்து, மியான்மர் அரசை கைப்பற்றியது. பின்னர் ராணுவம் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை வீட்டு காவலில் வைத்தது.

மியான்மர் மக்கள் அனைவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்த, அதில் ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.