நைபிடா

மியான்மர் நாட்டில் ராணுவத்தினர் ஆளும் கட்சித் தலைவர்களைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பர்மா என அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டில் ராணுவப்புரட்சி என்பது புதிய விஷயம் கிடையாது.  அந்நாட்டு அரசியலில் ராணுவமே முக்கிய இடம்பெற்றுள்ளது. கடந்த 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறும் முன்பு ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருந்தது.   அந்த அரசுக்குத் தலைமை தாங்கிய ஆன் சான் தற்போதைய தலைவர் ஆங் சான் சூகியின் தந்தை ஆவார்.

தனது ஆட்சியின் போது பர்மிய விடுதலை படை என அழைக்கப்பட்ட ராணுவ அமைப்பைக் கலைத்து விட்டு அரசியல் கட்சியை ஆரம்பித்தார்..  ஆயினும் அந்நாடு விடுதலை அடையும் முன்பே அவர் அரசியல் எதிரிகள் அவரை கொலை செய்தனர்.  அதன் பிறகு அவருடைய சகாக்கள் ஆட்சியில் மட்டுமின்றி ராணுவத்திலும் தலைமை பொறுப்பை ஏற்றனர்.

பர்மிய நாடாளுமன்ற வேண்டுகோளின்படி 1958 ஆம் வருடம் ராணுவம் இடைக்கால ஆட்சி நடத்தியது.   கடந்த 1962 ஆம் ஆண்டு ராணுவம் தானே நேரடியாக ஆட்சியைப் பிடித்தது.  கடந்த 2011 ஆம் ஆண்டு வரை இந்த ராணுவ ஆட்சி நடந்தது.   கடந்த 1988 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. அந்த கால கட்டத்தில் தன் தாயைக் காண ஆன் சான் சூகி ரங்கூன் வந்தர்.

அப்போது அவர் லண்டனில் வசித்து வந்தார்.  அவருக்கு ஆங்கிலேயக் கணவர் மற்றும் இரு மகன்கள் இருந்தனர்.  இவர் மட்டும் தனியாக இங்கு வந்தபோது நாட்டின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு தேசிய ஜனநாயக லீக் என்னும் கட்சியைத் தொடங்கினார்.   ஆனால் ராணுவம் இந்த போராட்டத்தை முடக்கி சுகியை வீட்டுக் காவலில் வைத்தது.  சுமார் 15 ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் இருந்தார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய தேர்தலில் ஆன் சாங் சூகியின் கட்சி மொத்தமுள்ள 492 இடங்களில் 392 இடங்களைக் கைப்பற்றியும் ராணுவம் பதவி விலக மறுத்தது.  இதற்கிடையில்  சூகி 1991 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்  பரிசை பெற்றார்.   மீண்டும் 2010 ஆம் ஆண்டு அதாவது 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடந்தது. அதில் ராணுவ ஆதரவு பெற்ற யு எஸ் டி பி கட்சி வென்று ஆட்சி அமைத்தது.

அப்போது அதிபரான தெயின் செயின் சூகியை விடுவித்தார்.  2010 தேர்தலை  புறக்கணித்த சூகியின் என் எல் டி கட்சி 2012 நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது தேர்தல் நடந்த 45 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது.  எதிர்க்கட்சி தலைவராக சூகி பதவி ஏற்றார்.  பிறகு 2015 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சூகி ஆட்சி அமைத்தார்.,

 அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ரோஹிங்கியா இனப் படுகொலை அவரது புகழ் சரிய காரனமானது.  உலக அளவில் கடும் குற்றச்சாட்டை எதிர் கொண்ட சூகி மியான்மரில் ஆதரவு குறையாமல் நவம்பர் மாதம் அதாவது கொரோனா காலத்தில் நடந்த தேர்தலில் வெற்றி வாகை சூடினார்.  ஆயினும் ராணுவம் அவர் மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் கூறி சூகி அதிபராக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

மீண்டும் என் எல் டி கட்சி ஆட்சி அமைக்க உள்ள நேரத்தில் இன்று அதிகாலை அங்கு மீண்டும் ராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.  என் எல் டி கட்சியின் செய்தி தொடர்பாளர் அன் சாங் சூகி மற்றும் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதனால் கடும் பதற்றம் உண்டாகி உள்ளது.   மியான்மர் தலைநகரான நய்பிடாவில் தொலைப்பேசிகள் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது.