டெல்லி: மியான்மரில்  நேற்று பெரும் நிலநடுக்கம்  ஏற்பட்ட நிலையில், இன்று காலையிலும்  நில அதிர்வு காணப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஏற்கனவே நேற்று நடைபெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்த நிலையில்,  1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர்  காயம் அடைந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

மியான்மர் நிலநடுக்கம் தொடர்பாக இன்று காலை நாட்டின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலநடுக்கம் காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது, 2,376 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மியான்மர்-தாய்லாந்தில் நேற்று (மார்ச் 28ந்தேதி)  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  காலை முற்பகல்  11.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு  ரிக்டர் அளவில் 7.7 ஆக  இருந்தது.  இதையடுத்த அடுத்த 12  நிமிடத்தில் முண்டும் ரிக்டர் அளவு கோலில் 6,4 அளவில் மீண்டும்  மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த சமயத்தில் அருகே உள்ள அண்டை நாடான  தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம்  மியான்மர்  தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில்  காரணமாக, மியான்மர் நாட்டில் உள்ள உயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிங்கள், சீட்டுக்கட்டுகள்  சிதறி விழுந்தன. நிலநடுக்கம் உணரப்பட்ட உடனே ஏராளமானோர் வீடு அலுவலகங்களை விட்டு வெளியேறிய நிலையில், வீடு மற்றும் அலுவலகங்களுக்குள் இருந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி மரணத்தை தழுவி உள்ளனர்.  பல வீடுகள் இடிந்து தரைமட்ட மாகின.

இதையடுத்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன. கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் பிணமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. படுகாயங்களுடன் மீட்கப்படுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரவு முழுவதும் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் மியான்மரில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1002 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதுவரை 2,376 காயமுடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும்  பேர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி கட்டிடங்களில் தங்கியிருந்த பலரது நிலைமை குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை,   ஏராளமானோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் மீட்புப் பணிக்கு மத்தியில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.56 மணிக்கு மியான்மரை நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 4.2-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே பீதியில் இருந்த மக்கள், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். பலர் வீடுகளுக்கு செல்லாமல் சாலைகளிலேயே இரவு பொழுதை கழித்தனர்.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச உதவியை ராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் கோரியுள்ளார். எந்த வெளிநாட்டு உதவிகளையும் பெற மியான்மர் தயாராக இருப்பதாகவும், நேபிடாவ், மண்டலே மற்றும் சகாயிங் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதாகவும் தெரிவித்தார்.

மியான்மரில் சில பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 101 தொழிலாளர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.