சிவசேனாவின் குரலாக செயல்பட்டு வருபவர் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத். தற்போது மராட்டியத்தில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா, தேர்தல் முடிந்து, அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பிரச்சினை எழுந்தது முதல், பாரதீய ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக கம்பு சுற்றி வருகிறது.
இந்நிலையில், சஞ்சய் ராவத் கூறியுள்ளதாவது, “சட்டசபைத் தேர்தலுக்குப் பின்பாக, பாரதீய ஜனதாவுக்கு எதிராகவும், தற்போதைய ஆட்சிக் கூட்டணியை அமைப்பதிலும் எனது பங்கு முக்கியமானதாக இருந்தது.
இதனால், அப்போதைய பட்னாவிஸ் அரசால் எனது போன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தலைவர் ஒருவரே எனக்குத் தெரிவித்தார். எனது போன் மட்டுமல்லாமல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் வேறுசில சிவசேனா தலைவர்களின் பேச்சுகளும் ஒட்டுக்கேட்கப்பட்டன” என்றுள்ளார் அவர்.
ஆனால், அவரின் இந்தக் குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வன்மையாக மறுத்துள்ளார்.