டில்லி
உச்சநீதிமன்ற 47 ஆம் தலைமை நீதிபதியாகச் சிபாரிசு செய்யப்பட்டுள்ள நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே தனக்கு நீதி மட்டுமே ஒரே கொள்கை எனத் தெரிவித்துள்ளார்.
சென்ற வருடம் அக்டோபர் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் 46வது தலைமை நீதிபதியாக பதவிக்கு வந்தவர் ரஞ்சன் கோகாய். நவம்பர் மாதம் 17ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் கோகாயின் பரிந்துரைப்படி நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக நவம்பர் 18-ம் தேதி பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றம் தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஷரத் அரவிந்த் போப்டே என்பதுதான் எஸ்.ஏ.போப்டே பெயரின் விரிவாக்கம் ஆகும். கடந்த 1956ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்த போப்டே நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர். இவரது தாத்தா வழக்கறிஞராக இருந்தார். எஸ் ஏ போப்டேவின் தந்தை அரவிந்த் போப்டே 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் அட்வகேட் ஜெனரலாக உயர் பதவி வகித்தவர் ஆவார்.
போப்டே தனது பட்டப்படிப்பை நாக்பூரில் எஸ்.எஃப்.எஸ் கல்லூரியில் படித்தார். 1978ல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவர் 1978 செப்டம்பர் 13ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தவர். 1998ல் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தைப் பெற்றார்.
போப்டே 2000 29 மார்ச் அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2012 அக்டோபர் 16ல் பணியமர்த்தப்பட்டார். 2013 ஏப்ரல் 12ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். 2021 ஏப்ரல் 23ம் தேதி போப்டே ஓய்வு பெறுவார்.
நீதிபதி எஸ் ஏ போப்டே செய்தியாளர்களிடம், “எனது ஒரே கொள்கை மற்றும் குறிக்கோள் நீதி என்னும் ஒரே வார்த்தைக்குள் அடங்கி உள்ளது. அதாவது அனைத்து தரப்பினருக்கும் நீதி என நான் கூற வந்தேன். நீதிமன்றங்கள் அதற்காக மட்டுமே உள்ளனவே தவிர வேறொன்றுக்கும் இல்லை. நீதிமன்றம் இருப்பதே நீதி நீதிக்கு மட்டுமே. எனது கொள்கையும் அதுவே ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.