டில்லி
காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட கிரிக்கெட் வீரர் இர்ஃபான்பதான் மனத் துயரம் அடைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் உலகுக்கு காஷ்மீர் மாநிலம் பல வீரர்களை அளித்துள்ளது. இந்த வீரர்களின் பயிற்சிக்காகக் காஷ்மீர் மாநிலத்தில் பல புகழ்பெற்ற வீரர்கள் இந்த இளைஞர்களுடன் போட்டியில் விளையாடுவது வழக்கமாகும். இது போன்ற பயிற்சி முகாம் ஒன்றை தற்போது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் நடத்தி வருகிறது. இதில் இந்தியாவின் ஆல் ரவுண்டரான இர்ஃபான் பதான் உள்ளார்.
தற்போது காஷ்மீரில் நிலவி வரும் பதட்டம் காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதைப் போல் அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே சுமார் 100க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி உள்ளனர். இர்ஃபான் பதான் நேற்று மற்ற பயிற்சியாளர்களுடன் வெளியேறி உள்ளார்.
இவ்வாறு காஷ்மீரை விட்டு வெளியேறியது இர்ஃபான் மனதில் கடும் துயரத்தை உண்டாக்கி உள்ளது. அவர் தனது டிவிட்டரில், “எனது உள்ளம் மற்றும் எண்ணம் ஆகியவை இன்னும் காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள், காஷ்மீரில் உள்ள இந்திய சகோதர சகோதரிகள் ஆகியோருடன் உள்ளன.” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.