புதுடெல்லி: காவல்துறையால் கைது செய்யப்பட்டபோதும், வஞ்சிக்கப்பட்டபோதும், தான் இன்னும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் 23 வயதான திஷா ரவி.
கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளியான இவர், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக, டூல்கிட் உருவாக்க விவகாரத்தில் டெல்லி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
அவர் தற்போது தனது கைது மற்றும் தான் நடத்தப்பட்டவிதம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “என்னை கடந்த பிப்ரவரி 13ம் தேதி காவல்துறை கைது செய்யவில்லை, என்னை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை, மீடியாக்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக என்னை குற்றவாளியாக சித்தரிக்கவில்லை என்றெல்லாம் எனக்கு நானே நினைத்துக்கொண்டு திடம்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், அவர்கள் எனது மொபைலையும், லேப்டாப்பையும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் நினைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் என்னை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவில்லை என்றும் நான் என்னையே தேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.
நீதிமன்றத்தில் எனக்காக ஒரு வழக்கறிஞர்கூட கிடையாது. இதனால், 5 நாள் காவல்துறை கஸ்டடிக்கு அனுப்பப்பட்டேன். ஆனால், என்னை ஒரு குற்றவாளியாக, டிஆர்பி ரேட்டிங்கில் மோகம் கொண்ட ஊடகங்கள் சித்தரித்தார்கள்.
ஆனாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான எனது போராட்டம் இப்போதும் தொடர்கிறது” என்றுள்ளார் திஷா ரவி.