மும்பை:

பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயல்  “Aaj ke Shivaji: Narendra Modi”  என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டுள்ளார். இது மகாராஷ்டிரா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், மகாராஷ்டிரா மாநில பாஜக உள்பட சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளன. பாஜக எம்பி. பகவான் கோயல், மகாராஷ்டிரா மக்களை அவமானப்படுத்தி உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில்   நரேந்திர மோடி- இன்றைய சிவாஜி என்ற தலைப்பில் பாஜக எம்.பி. ஜெய்பகவான் கோயல் புத்தகம் எழுதிய இந்த புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.

தனது புத்தகம் தொடர்பாக ஜெய் பகவான் சமூக வலைதளப் பகக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை கண்ட மராட்டிய மக்கள்,  இந்த புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த  புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்,  “ஷபாஸ் (நன்றாக) பிஜேபி!” என்று கேலி செய்துள்ளதுடன், கோயல், மகாராஷ்டிராவையும் மராத்தி பேசும் மக்களையும்  இழிவுபடுத்தி உள்ளார் என்று குற்றம் சாட்டி உள்ளார். இது சிவாஜிக்கு அவமதிப்பு என்றும், “குறைந்தபட்சம் மகாராஷ்டிரா பாஜக இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பவர்,  சத்ரபதி சிவாஜி மகாராஜை இந்த உலகில் யாருடனும் ஒப்பிட முடியாது. ஒரே ஒரு சூரியன், ஒரு சந்திரன் மற்றும் ஒரே ஒரு சிவாஜி மகாராஜ் … சத்ரபதி சிவாஜி மகாராஜ். ” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மேலும்,  முன்னாள் சதாரா எம்.பி. உதயன்ராஜே போசாலே என்று பெயரிடாமல், சமீபத்தில் பாஜகவில் இணைந்த போர்வீரர் மன்னரின் வழித்தோன்றல்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

(சத்ரபதி சிவாஜியின் 13 வது வம்சாவளியான போசலே, ஏப்ரல் 2019 பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்குள் என்சிபி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, பாஜகவில் சேர்ந்த மக்களவை தேர்தலை சந்தித்த நிலையில், அவர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.)

இதுகுறித்து கூறிய பாஜக மாநிலங்களவை எம்.பி. சத்ரபதி சம்பாஜி ராஜே, போர்வீரர் மன்னரின் வழித்தோன்ற லும் கூட, இந்த புத்தகத்தை தடை செய்யக் கோரி உள்ளனர் என்றும்,  “இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மோடியையோ அல்லது உலகில் வேறு யாரையோ சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் ஒப்பிட முடியாது” என்று தெரிவித்து உள்ளார். இந்த புத்தகத்தை  பாஜக தலைவர் அமித் ஷா உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,  “இந்த புத்தகம் தொடர்பாக மக்கள் சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர், மேலும் அதை தடை செய்யக் கோருகின்றனர்” என்று சம்பாஜி ராஜே கூறினார்.

இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சமூக நீதி அமைச்சரும், என்சிபி தலைவருமான தனஞ்சய் முண்டே, பாஜக மராத்தி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது,  “சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவ்வாறு செய்ய முயற்சிப்பவர்களை மகாராஷ்டிரா ஒருபோதும் மன்னிக்காது” என்று தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா நீர்வளத்துறை அமைச்சரும், மாநில என்சிபி தலைவருமான ஜெயந்த் பாட்டீலும் சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றும், யாராவது அவ்வாறு செய்ய முயற்சித்தால் அவர்கள் அதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரம,  முன்னாள் முதல்வரும், தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருமான அசோக் சவான்,  சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஆளுமையும் பணியும் ஒப்பிடமுடியாதவை என்றும்,  “எந்தவொரு வீரரும் புகழ்பெற்ற போர்வீரர் ராஜாவின் கால் ஆணியுடன் கூட பொருந்த முடியாது,” என்று கடுமையாக விமர்சித்தார்.

பாஜக எம்.பி. எழுதியுள்ள சிவாஜியுடன் மோடியை ஒப்பிட்டு எழுதியுள்ள புத்தகம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்  பேசிய முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை  சிவாஜி மகாராஜாவுடன் ஒப்பிட்டு பேசியதும், அதற்கு சிவசேனா உடனே பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.