முஸாஃபர்பூர்: பீகாரின் முஸாஃபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தனியாக ஆட்களைப் பராமரித்து வருகின்றன என்ற தகவல் வெளிவந்துள்ளது.

கொல்கத்தாவில் இறந்துபோன நோயாளியின் உறவினர்களால் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம், நாடெங்கிலும் பெரிய பரபரப்பை கிளப்பியது. ஆனால், அதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முஸாஃபர்பூர் பகுதியில் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பிற்காக ஆட்களை நியமித்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.

இந்த பாதுகாப்பு அணியில் துப்பாக்கி ஏந்திய நபர்கள், உடற்கட்டு நிபுணர்கள் மற்றும் கம்புகள் ஏந்திய இளைஞர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், எப்போது அழைத்தாலும் உடனே வருவதற்கு தயாராக இருப்பவர்கள். மேலும், இந்த அணியில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினரும் உண்டு.

சமீபத்தில், முஸாஃபர்பூர் நகரில் மூளைவீக்க நோயால் சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தபோதும், அங்கே மருத்துவர்கள் மீது எந்த தாக்குதலும் நிகழவில்லை.

ஏற்கனவே மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் காவல் துறையினர், அவர்களுக்கான பணிகளையே கவனிக்க முடியாத நிலையில், மருத்துவர்களுக்கு எப்படி அவர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள்? என்று கேள்வி எழுப்புகின்றனர் முஸாஃபர்பூர் மருத்துவமனை வட்டாரங்கள்.