சென்னை
திடீரென ரயில்வே தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என முத்தரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”ரயில்வே தேர்வு வாரியம் மூலம் ரெயில் உதவி ஓட்டுநர் (லோகோ பைலட்) பணியிடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்வு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு தெலுங்கானா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தவறு என்று சுட்டிக்காட்டிய போதும், பொருந்தாத சில விளக்கங்களை ரயில்வே துறை அளித்தது.
இந்நிலையில், புதன் கிழமை நடைபெற விருந்த தேர்வுக்காக மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், அரியலூர், குமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 5,000-க்கும் மேற்பட்டோர் ஹைதராபாத் சென்றிருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இது தேர்வு எழுதச் சென்றவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.
நீண்ட தூரம் பயணம் செய்து, இன்றுள்ள வாழ்க்கைச் சூழலில், ரூபாய் 3,000, 4,000 செலவு செய்து தேர்வுக்காக சென்றவர்களின் ஆர்வ விருப்பங்கள் மீது ரயில்வே துறை அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளதை இது காட்டுவதோடு இது ரயில்வே தேர்வு வாரியத்தின் தோல்வியையும் அப்பட்டமாக காட்டுகிறது.
ரயில்வே வாரியம் உடனடியாக தேர்வு எழுதச் சென்றவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டிலேயே இத்தகைய தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
என்று கோரப்பட்டுள்ளது.