புதுடெல்லி:
முத்தலாக் முறையில் விவாகரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது.
2019-ம் ஆண்டு முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகள் சட்டத்துக்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது. கடந்த பிப்ரவரியில் அமலுக்கு வந்த இந்த சட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.
இந்த சட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முத்தலாக் தடை சட்டத்தை முன்பு மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது ராஜ்யசபையில் இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.
இதற்கிடையே, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முஸ்லிம் பெண்களுக்கு பாலின சமத்துவத்தையும் முஸ்லிம் பெண்களுக்கான பாலின நீதியையும் இந்த சட்ட மசோதா உறுதி செய்யும்.
மேலும் திருமணமான முஸ்லிம் பெண்ணின் உரிமைகளை பாதுகாக்கவும் தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கத்தை தடுக்கவும் உதவும்.
முத்தலாக் நடைமுறையை சட்டவிரோத செயலாக அறிவிப்பதையும், முஸ்லிம் பெண்களுக்கும், அவர்களைச் சார்ந்தோரின் குழந்தைகளுக்கும் வாழ்வாதார இழப்பீடு வழங்குவதையும் இச்சட்டம் முன்மொழிகிறது.
இச்சட்டம் முத்தலாக் நடைமுறையை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாக முன்மொழிகிறது.
அந்த வகையில் தலாக் பெறப்பட்ட திருமணமான முஸ்லிம் பெண் அல்லது அவரது ரத்த சம்பந்தப்பட்ட உறவினரோ அல்லது திருமணத்தால் அவருடன் தொடர்புடைய எந்த நபரும் இந்த குற்றம் தொடர்பான தகவலை போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரியிடம் வழங்கினால், தலாக் கூறியவர்தண்டனைக்குரிய குற்றவாளியாக கருதப்படுவார்.
திருமணமான முஸ்லிம் பெண்ணிடம் தலாக் கூறுவது குற்றமாக கருதப்படும்.
தலாக் கூறப்பட்ட முஸ்லிம் பெண்ணின் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், மாஜிஸ்திரேட் அளிக்கும் ஜாமீனில் மட்டுமே விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.