கொல்கத்தா

பாஜக தலைவரும் நேதாஜியின் உறவினருமான சந்திரபோஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியரைச் சேர்க்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  இந்த எதிர்ப்பு போராட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முன்னின்று நடத்தி வருகிறார்.  ஆரம்பத்தில் கடும் வன்முறைகள் நிகழ்ந்த இந்த போராட்டங்கள் தற்போது அமைதி அடைந்துள்ள போதிலும் போராட்டம் தொடர்கிறது.

அம்மாநில பாஜக துணைத் தலைவரும் நேதாஜியின் உறவினருமான  சந்திர போஸ், “குடியுரிமை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை அரசு அலட்சியம் செய்யக்கூடாது.   அதே வேளையில் எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாகத் திசை திருப்பக் கூடாது.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எந்த ஒரு மதத்துக்கும் இந்த சட்டம் எதிரானது அல்ல எனக் கூறியுள்ளனர்.  ஆனால் மற்ற தலைவர்கள் அளிக்கும் அறிக்கை மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.  இதைச் சமாளிக்க இந்த சட்டத்தில் இது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல என்பதைச் சேர்க்க வேண்டும்.  அத்துடன் இந்த சட்டத்தில் இஸ்லாமியரையும் சேர்க்க வேண்டும்.

இந்த சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க உள்ளது. அதே கால கட்டத்தில் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்களின் நிலை என்ன?  அவர்களையும் இதில் சேர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.