குருத்வாராவில் முஸ்லிம்கள் தொழுகை: மழையால் மலர்ந்த மத நல்லிணக்கம்

Must read

டேராடூன்:

வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பொழிந்து வருகிறது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்கள்.

பக்ரீத் பண்டிகையின் போது கடும் மழை பெய்ததால், மைதானத்தில் தொழுகை நடத்த முடியாமல் தவித்த முஸ்லிம்களுக்கு, சீக்கிய குருத்வாராவில் சீக்கிய  நிர்வாகிகள் இடம் தந்து உதவினர்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள ஜோஷிமத் நகரில், நேற்று முன்தினம், வழக்கமான உற்சாகத்துடன், பக்ரீத் பண்டிகை கொண்டா டப்பட்டது. அந்நகரில் உள்ள காந்தி மைதானத்தில் வழக்கம் போல், பக்ரீத் தொழுகை நடத்த, ஏராளமான முஸ்லிம்கள் கூடினர்; திடீரென மழை பெய்ததால், தொழுகை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

சிறிது நேரம் காத்திருந்தும் மழை நிற்கவில்லை. பலத்த மழையால், மைதானம் சேறும், சகதியுமாக மாறியது; இதனால், அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இந்நிலையில், அருகில் இருந்த சீக்கிய குருத்வாரா நிர்வாகிகள், தங்கள் வளாகத்தில் கூரை இருப்பதால், அங்கு வந்து தொழுகை நடத்தும்படி அன்புடன் அழைத்தனர்.

இதை ஏற்று, குருத்வாரா வளாகத்தில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, தொழுகை நடத்த இடமளித்த, குருத்வாரா நிர்வாகிகளை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

More articles

Latest article