மும்பை:
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 5 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நேற்று மதியம் 80 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த உடன் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பழைய இரும்பு வியாபாரி இர்பான் ஷேக் என்ற முஸ்லிம் தான் முதன் முதலில் ஹெலிகாப்டர் அருகே சென்றார்.
‘‘ஹெலிகாப்டர் உள்ளே நமது மன்னர் சிக்கியுள்ளார்’’ என்று சத்தம் போட்டுக் கொண்டே அவர் அருகில் ஓடினார். விழுந்த ஹெ லிகாப்டர் வெடிக்கும் என்ற பயத்தில் அங்கிருந்த பலர் அருகில் செல்லாமல் ஓட்டம் பிடித்தனர். 24 வயதாகும் ஷேக் அருகில் சென்று உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டார்.
‘‘ஹெலிகாப்டர் கதவு முற்றிலும் உருக்குலைந்து விட்டது. இதனால் வெளியில் இருந்து கதவை திறக்க முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. பின்னர் முதல்வர் பட்னாவிஸ் உள்ளே இருந்து வெளியே கதவை தள்ளினார். அதன் பிறகு தான் என்னால் அதை திறக்க முடிந்தது. எனது கையை கொடுத்து வெளியில் வர முதல்வருக்கு உதவினேன்’’ என்று ஷேக் உள்ளூர் மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
‘‘வெளியில் வந்த முதல்வர் நலமுடன் இருந்தார். அதன் பின்னர் ஹெலிகாப்டரில் சிக்கியிருந்த பைலட் மற்றும் அதிகாரிகளை மீட்கும்படி கேட்டுக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டார்’’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
மும்பையில் உள்ள முதல்வர் அலுவலக அதிகாரிகள் விபத்து முன்னேற்ற தகவல்களை உறுதி செய்தனர். ஆனால், இக்கட்டான சூழ்லையில் உதவி செய்து மீட்ட இரும்பு வியாபாரியை முதல்வர் பாராட்டினாரா என்ற தகவலை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
பின்னர் பட்னாவிஸ் கூறுகையில், ‘‘ 12 கோடி மகாராஷ்டிரா மக்கள் மற்றும் ஜெய் பவானி ஆசீர்வாதத்தால் நானும் இதர 5 பேரும் காப்பாற்றப்பட்டோம்’’ என்று தெரிவித்திருந்தார்.