பெங்களூரு
பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகர் ராமர் கோவிலை சதாம் ஹுசைன் என்னும் இஸ்லாமியர் சுத்தம் செய்து வருகிறார்.
பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகர் நான்காம் பிளாக்கில் அமைந்துள்ள ராமர் கோவில் 1950களின் இறுதியில் கட்டப்பட்டதாகும். ராஜாஜி நகர் லே அவுட் அமைக்கும் போது இந்த கோவிலுக்கான நிலம் ஒதுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலில் விரைவில் ஸ்ரீராமநவமி விழா நடைபெற உள்ளது. அந்த விழாவுக்காக ஒரு தேர் ஊர்வலம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர் ஊர்வலத்துக்கு வெள்ளோட்டம் பார்ப்பதற்கு முன்பு தேரை பராமரிப்பு செய்ய ஆலய ஊழியர் ஒருவர் பணியை தொடங்கி உள்ளார். அவர் பெயர் சதாம் ஹுசைன். இஸ்லாமியரான இவர் இந்த கோவிலில் பல பணிகளை நிர்வகித்து வருகிறார். கோவில் முழுதும் சுத்தம் செய்வது, கோபுரத்தின் மீது ஏறி சிலைகளில் உள்ள அழுக்கை அகற்றுவது உள்ளிட்ட பல பணிகளை இவர் செய்து வருகிறார்.
இவரை இந்த கோவில் சுத்திகரிப்பு பணிக்கு நியமித்த பூஜை பொருட்கள் வியாபாரி வெங்கடேஷ் பாபு, “நான் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் பிள்ளையார் சிலைகள் விற்கும் போது என்னிடம் சதாம் ஹுசைன் உதவியாளராக இருப்பார். சரியான பணி இன்றி இருந்த அவரை கோவில் சுத்திகரிப்பு உள்ளிட்ட வருடாந்திர பணிகளுக்கு நான் பரிந்துரை செய்தேன். அவருடைய வேலைத்திறன் பிடித்துப் போனதால் அவர் அதே கோவிலில் நிரந்தர ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளர்” என தெரிவித்தார்.
இது குறித்து கோவில் அலுவலக நிர்வாகிகள் நாகராஜையா மற்றும் பத்மநாபா ஆகியோர், “எங்கள் கோவிலில் விசேஷ நேரங்களில் கோவில் சுற்றுப்புறம் மற்றும் பாத்திரங்கள் சுத்தம் செய்ய 15 பெண்கள் பணி புரிவார்கள். அவரக்ள் அனைவரும் இஸ்லாமியப் பெண்கள் ஆவார்கள். நேரத்துக்கு வந்து அவரவர் பணியை முடித்து விட்டு சென்று விடுவார்கள். நாங்கள் அவர்கள் மதத்தை பற்றி கேட்பதோ கருத்தில் கொள்வதோ கிடையாது. அவர்களுடைய பணியால் கோவில் சுத்தமடைவதை மட்டுமே கவனிப்போம்.” என தெரிவித்துள்ளனர்.