முறிவு
கவிதை
◆ பா.தேவிமயில் குமார் ◆
◆ பிரியமான
பொழுதுகளை
பிரித்து விட்டோம்
நாமே, நம்மிடமிருந்து!
◆ காதலின் கனவுகள்
களவு போனது-என்
கண்களை விட்டு-நீ
விலகிய போது!
◆ ஓரு காலத்தில்
உனக்காக உறவுகளை
உதறி விட்டு வந்தேன்-இன்றோ
நீயும் உதறினாய்!
◆ இருண்ட கார்
இந்த கூந்தலென்றாய்-அன்று
இரண்டிலொன்று
பார்த்திடலாம் என்கிறாய் இன்று!
◆ என்றென்றும் நீ
எனக்கானவள் என்றாய்,
இன்றோ…
என்றுமே என்னை வேண்டாமென்றாய்
◆ விடியும் பொழுதாய்
உன்னோடிருந்தேன் அன்று
விடியாத இரவுகளோடு
தனிமையிலுள்ளேன் இன்று!
◆ வாழ்வைப் பரிமாற
வாவென்றாய் அன்று,
இன்றோ தூக்கியெறிந்தாய்
எச்சில் பட்ட இலையாய்!
◆ ஏழடி சேர்ந்து நடந்தாலே
நண்பர்களாம்… ஆனால்
ஏழாயிரம் அடிகள் சேர்ந்தே நடந்தோம் !
ஏன், நாம் பிரிகிறோம் ?
◆ நமக்கான காதல்
பதவுகள் ஏராளம், அதைப்
பறித்திட சட்டத்தை
நாடுவது ஏன்?
◆ வாழ்க்கை ஓப்பந்தந்தை
வாசிக்கத் தவறியவனே !
சந்தர்ப்பங்களை
சாட்சியாக நிறுத்தாதே!
◆ பிரிவதென
முடிவான பின்
வார்த்தைத் தாக்குதல்
வேண்டாமடா!
◆ “வாழாவெட்டி” பட்டத்தை
வாங்கித் தருபவனே,
படித்த பட்டங்களோடு
இனி…
இதையும் நான் சுமக்கவேண்டுமடா
◆ என் வேலியென
இருப்பாயென நினைத்தேன், ஆனால்
உன் “தாலியை” சுமந்திட, நீ
வேறு ஒரு “ஏமாளியை”த் தேடுகிறாய்
◆ சீதையை, பூமாதேவி அணைத்ததும்,
சகுந்தலையை வேதனைத் துரத்தியதும்,
பிரிவால் என்பது இப்போது
புரிகிறதடா ! உன்னாலே !
◆ ஆனாலும் ………
திருமண நிழற்படத்தை
நிஜமாக்கிட
நினைக்கிறேன், உன்னோடு
மீண்டும் ஓருமுறை!
◆ நீயோ ….
நீண்ட பயணத்திற்கு
இன்னொரு
இளையவளிடம்
வாழ்வைப் பகிரலாம்
வா என அழைக்கிறாய்!
◆ உன் நினைவுகளோடு
உடலால் மட்டுமே
வாழ்கிறேன்!
உண்மையில் உயிர்
எங்கென்று அறியேன்!
◆ துணை நின்றவனே உன்
இரண்டாம் துணையை
இதுபோல காதல்
இரங்கற்பா எழுத வைத்திடாதே!
◆ என்றாவது ஒரு நாள்
என்னை நீ நினைக்கும் போது
கண்ணில் நீர் வரும் ஆனால்
காலம் கடந்திருக்குமே ! அன்று
◆ மண முறிவுகள்
முறிந்து போகட்டும்-நம்
இருவரோடும் இந்த உலகில்
இறுதியாய்!
– பா.தேவிமயில் குமார்