சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள், போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கொலை, பாலியல், போதை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்ற சம்பவங்களை கட்டுக்கொண்டு வர, குற்றவாளிகள், ரவுடிகளை சுட்டுப்பிடிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக தொடர்ந்து வரும் படுகொலை சம்பவங்கள், ரவுடிகள் மோதல், கொலை உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சாதிய வன்முறைகள், நிலம் தொடர்பான வன்முறைகள், மணல் மாஃபியாக்கள், கனிம வள மாஃபியாக்களின் சட்டவிரோத செயல்கள் அதிகரித்து, அதை தட்டிக்கேட்பவர்கள் வெட்டி கொல்லப்படும் சம்பவம் போன்றை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் லாரி ஏற்றி கொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, எஸ்.ஐ ஜாகீர் உசேன் நிலத்தகராறு தொடர்பான பிரச்சினையில் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும், தொழிற்சங்க நிர்வாகி கும்புசாமியின் உதவியாளர் குமார் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். ஈரோட்டில் பட்டப்பகலில் சாலையில் வைத்து ரவுடி ஒருவர் வேறு சில ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவையும் எதிர்க்கட்சிகள் திமுக அரசையும், காவல்துறையினரையும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்ற செயல்களை கட்டுப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நிலப்பிரச்சினைகள், கொலை மிரட்டல் தொடர்பாக காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சம் இன்றி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை சிறையில் அடைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் பட்டியலை தயார் செய்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டிஎஸ்பி, இண்ஸ்பெக்டர் அனைவரும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், ரவுடிகளுக்கு இடையேயான மோதல் சம்பவங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், அவர்களை கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவுகள் வெளியாகியுள்ளது.