சென்னை: மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் நேற்று (அக்.10) அதிகாலை பெங்களூருவில் காலமானார்.  இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனருமாவார். மேலும் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராகவும், பத்திரிகை துறையிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்த முரசொலி செல்வம், முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற பெயரில் தொடர்ந்து கட்டுரைகளும் எழுதி வந்தார். முரசொலி நாளிதழுக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து,  அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும்,  அஞ்சலி செலுத்தினர்.

மூத்த அமைச்சர்  துரைமுருகன்,  உள்பட தமிழக அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் முரசொலி செல்வத்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் .ஜி.க.வாசன். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி. முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து. தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் எ.கோபண்ணா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சிந்தனைச் செல்வன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், துணைப் பொதுச் செயலாளர் மதிவதினி, திராவிடக் கழக வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதுபோல திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திரைப்பட இயக்குனர் பி.வாசு, திரைப்பட நடிகர் பாக்கியராஜ், அவரது மனைவி பூர்ணிமா பாக்கியராஜ், திரைப்பட நடிகர்கள் பார்த்திபன், எஸ்.வி. சேகர், திரைப்பட இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர், திரைப்பட நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் குடும்பத்தினர், திரைப்பட நடிகர் ராம்குமார், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவரும் திரைப்பட நடிகருமான வி.ராஜேஷ், திரைப்பட நடிகர் தியாகராயன், திரைப்பட நடிகை நளினி ஆகியோர் முரசொலி செல்வத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ரவி, டாக்டர் நல்லி குப்புசாமி, அகில இந்திய இரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும் தென்னக இரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளருமான டாக்டர் கண்ணையா, நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன வேந்தர் விஆர் வெங்கடாசலம், ரேலா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் முகமது ரேலா, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் தங்கம், பேராயர் ஹென்றி, அருள் தந்தை சர்மா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதுபோல, அரசு ஊழியர்கள் சங்கமான  ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மறைந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து முரசொலி மாறன் உடல் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைத்து ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் கோபாலபுரத்தில் இருந்து காவேரி மருத்துவமனை வழியாக, சென்று திரு.வி.க பாலத்தில் இருந்து இடது புறமாக சென்று பெசன்ட் நகர் மின் மயானம் சென்றது.

பிறகு மின் மயானத்தில் முரசொலி செல்வத்தின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களின் இறுதி அஞ்சலியை தொடர்ந்து முரசொலி செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.