மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில் கடந்த 6ம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் குடிசை அமைத்து வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்த மாநில மீட்பு குழுவினர், காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அப்பகுதிகளில் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடமாடும் மருத்துவக் குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கிய 12 பேர் முதல்நாளில் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மீட்கப்படுவோர் அனைவரும் உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டு வருகின்றனர். நேற்று வரை நடைபெற்ற கடந்த 4 நாட்கள் மீட்பு பணியில் 49 பேரின் உடல்கள் கண்ணெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இன்று மேலும் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது எஞ்சியவர்களை தேடும் பணி 5வது நாள் இன்றும் தொடர்ந்து வருகிறது.