சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சென்னை ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்தவர் முனீஷ்வர் நாத் பண்டாரி. இவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்தது.
அதன்படி முனீஷ்வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலிருந்து மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்ஜீவ் பானர்ஜி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்று முழுமையாக 11 மாதங்கள் ஆகாத நிலையில் அவரை திடீரென உச்சநீதிமன்ற கொலீஜியம் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய மத்திய அரசிடம் கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு சென்னையில் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெரிய பெரிய நீதிமன்றங்களில் அதிக சிக்கலான வழக்குகளை திறமையாக நடத்திய அனுபவம் கொண்ட சஞ்ஜீவ் பானர்ஜியை சென்னையிலிருந்து மாற்றி மேகாலயா போன்ற சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் பணியமர்த்தி அவரது அனுபவத்தை வீணடிக்க கூடாது. எனவே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதினர்.
எனினும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த சஞ்ஜீவ் பானர்ஜி பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனால், அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார்.