மும்பை: மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மும்பை டிரேட் யூனியன். இது பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மத்திய பாரதீய ஜனதா அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளால், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதாக கூறியுள்ளது மும்பை டிரேட் யூனியன். ஏனெனில், தேர்தல் போர்க்களத்தில், பாரதீய ஜனதா கூட்டணியை தோற்கடிக்கும் சக்தி, காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டுமே உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

அனைத்திந்திய டிரேட் யூனியன் காங்கிரஸ், இந்திய தேசிய டிரேட் யூனியன் காங்கிரஸ், சென்டர் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் மற்றும் இந்து மஸ்தூர் சபா போன்ற தொழிலாளர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, டிரேட் யூனியன் ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டி என்றதொரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

இந்தக் கூட்டமைப்பு, மாநிலம் முழுவதும் பாரதீய ஜனதா கூட்டணிக்கெதிராக பிரச்சாரம் செய்யவுள்ளது.

“மத்திய மோடி அரசு, தொழிலாளர் வர்க்கத்தை முற்றிலும் நசுக்கிவிட்டது. தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்கவில்லை. பாரதீய ஜனதா அரசிடமிருந்து தொழிலாளர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது.

எனவேதான், அக்கூட்டணியை எதிர்த்து, மராட்டியத்தின் 48 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என அக்கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் விஷ்வாஸ் உத்கி தெரிவித்துள்ளார்.

– மதுரை மாயாண்டி