மும்பை
நடிகர் ஷாருக்கான் மகன் வழக்கில் சமீர் வான்கடேவுக்கு கைது குறித்து 3 நாட்கள் நோட்டிஸ் அளிக்கப்படும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நண்பர்களுடன் கைது செய்யபப்ட்டார். அவர்களை என் சி பி மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர். இன்று மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் ஆரியன் கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாக இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரபாகர் செயில் என்பவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நாவப் மாலிக் சமீர் வான்கேட குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீதான குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீர் வான்கடே, பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிரான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
மேலும், “அதிகாரிகள் என்னைக் கைது செய்தால் சட்டம் என்னைக் காப்பாற்றும். அவர்கள் சொல்வது போல நான் போதைப்பொருள் வியாபாரி அல்ல. நான் ஒரு மண்டல பொறுப்பாளர். என்னைக் கைது செய்ய தடை விதிக்க வேண்டும்” என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மும்பை போலிசார் பம்பாய் உயர்நீதிமன்றத்தில், “நாங்கள் ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் என் சி பி மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவை கைது செய்ய நேர்ந்தால் அவருக்கு 3 நாட்கள் நோட்டிஸ் அளிப்போம் என உறுதி அளித்துள்ளனர். இதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.