த்லாபூர்

மும்பை – கோலாப்பூர் மகாலட்சுமி விரைவு ரெயில் வெள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் 14 மணிக்கும் மேல் துயருற்றுள்ளனர்.

தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மும்பை புறநகர் பகுதிகளான அந்தேரி, தானே உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. அத்துடன் மாநிலத்தின் பல பாகங்களில் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் கோலாப்பூர் இடையில் செல்லும் மகாலட்சுமி விரைவு ரெயில் வண்டி நேற்று அதிகாலை பதல்பூருக்கு 4 கிமீ தூரத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த ரெயிலை சுற்றி சுமார் 18” மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதை ஒட்டி ரெயில் ஓட்டுனர் ஒரு அவசர செய்தியை மும்பை சி எஸ் டி ரெயில் நிலையத்துக்கு அனுப்பி உள்ளார். மும்பை பிரிவு வர்த்தக மேலாளர் பிரகாஷ் கனோஜா உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு நேற்று காலை 7.50க்கு அங்கு விரைந்துள்ளது.

 

ரெயில் சிக்கிக் கொண்ட இடத்துக்கு செல்ல வழி இல்லாததால் அந்த குழு படகுகள் மூலம் அங்கு சென்று பயணிகளை மீட்கும் பணியை செய்துள்ளது. அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு ப்டையினர், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இந்த ரெயிலில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களை அவர்களுடைய பைகள் மற்றும் பெட்டிகளுடன் சிறிது சிறிதாக மீட்டுள்ளனர்.

பயணிகள் அனைவரும் படகுகள், கயிறுகள், மற்றும் அந்த பகுதி மக்கள் துணையுடன் மெதுவாக ரெயிலில் இருந்து வெளியேற்றப்பட்டு பத்லாபூர் ரெயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கிமீ தூரம் அளவுக்கு மலைப்பாதை என்பதால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் 14 மணி நேரத்துக்கு மேல் நடந்துள்ளன.  இது ஒரு பயங்கரமான 14 மணி நேர அனுபவம் என பயணிகள் தெரிவித்துளனர். இந்த பயணிகளுக்காக சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ரெயில் கல்யாணில் இருந்து இன்று காலை கிளம்பி உள்ளது. பத்லாபூரில் இருந்து பயணிகளை அந்த ரெயில் இன்று ஏற்றிச் செல்ல உள்ளது.