மும்பை
எழுத்தாளர் ஷோபா டே தனது குண்டு உருவப் புகைப்படத்தை பதிந்ததை கண்ட காவல்துறை ஆய்வாளர் தனது எடையக் குறைத்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் ஷோபா டே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் மும்பை நகராட்சி தேர்தல் சமயத்தில் ஒரு புகைப்படத்தை பதிந்தார். அதில் ஒரு குண்டான காவலர் படத்தை பதிந்து அதில் “மும்பையில் இன்று பலமான பாதுகாப்பு” என கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பலரும் ரசித்து பின்னூட்டம் இட்டிருந்தனர். அந்த புகைப்படத்தில் இருந்தவர் காவல்துறை ஆய்வாளர் தௌலத்ராம் ஜோகாவத் ஆவார்.
தனது குண்டு உருவத்தை அனைவரும் பின்னூட்டத்தில் கிண்டல் செய்வதைக் கண்ட அவர் தனது எடையை குறைக்க உறுதி பூண்டார். அதை ஒட்டி மும்பையில் உள்ள புகழ்பெற்ற சைஃபி மருத்துவமனையில் சிகிச்சையை தொடங்கினார். சிகிச்சை தொடங்கிய போது அவர் 185 கிலோ எடையுடன் இருந்தார். அவருக்கு கொழுப்பை நீக்க அறுவை சிகிச்சை நடைபெற்றது. மேலும் பல பயிற்சிகளும் தரப்பட்டன.
அவர் தற்போது 115 கிலோ எடையுடன் உள்ளார். தான் எடை குறைத்ததற்கு எழுத்தாளர் ஷோபா டே தான் காரணம் எனக் கூறி உள்ளார். எழுத்தாளர் ஷோபா டே அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு ஜோகாவத், “எனக்கும் உங்களை சந்திக்க மிகவும் ஆசையாக இருக்கிறது அக்கா. ஆனால் நான் இன்னும் 30 கிலோவாவது எடை குறைத்த பிறகுதான் உங்களை சந்திக்க வேண்டும் என இருக்கிறேன். உங்களால் தான் நான் இப்போது புதிய மனிதன் ஆகி உள்ளேன். எனது முகத்தில் இருந்தே அதை நீங்கள் கண்டு கொள்ளலாம்” என பதில் அளித்துள்ளார்.
எழுத்தாளர் ஷோபா டே அவருடைய பதிலால் மிகவும் மனம் மகிழ்ந்துள்ளார். எடையை குறைப்பது மூலம் அழகான தோற்றம் மட்டுமின்றி ஆரோக்யமும் அதிகரிக்கும் என அவர் கூறி உள்ளார்.