மும்பை: வரும் 28ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பேரணிக்கு, கூட்டணி அரசான உத்தவ் தாக்கரே அரசு, தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, மும்பை காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. அதுபோல மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், சிவசேனா, பாஜக, உள்பட பல பிரதான கட்சிகள் தனித்துப்போட்டியிட திட்டமிட்டு களப்பணியாற்றி வருகிறது.
இதையொட்டி, மும்பை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், வரும் 28-ம் தேதி தாதர் சிவாஜி பார்க்கில் கட்சி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் அனுமதி மறுத்து வருகின்றனர். மகாராஷ்டிராவில், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் பொதுக்கூட்டத் துக்கு அனுமதி வழங்காமல் தாக்கரே அரேசு இழுத்தடித்து வருவது சர்ச்சையாகி உள்ளது.
இதனால் பொதுக்கூட்டத்திற்கான வேலைகளை உடனே தொடங்க முடியாத நிலையில் , மும்பை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அக்டோபர் மாதமே மனுக்கொடுக்கப்பட்டு விட்ட நிலையில், மாநில அரசு, இன்னும் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. எனவே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மும்பை மாநில காங்கிரஸ் தலைவர் பாய்ஜக்தாப், “கூட்டத்திற்கு என்ன காரணத்திற்காக அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. கொரோனா விதிகளை முழுமையாக கடைப்பிடிப்போம் என்று உத்தரவாதம் அளித்துள்ளோம். அப்படி இருந்தும் இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. கூட்ட ஏற்பாடுகளை கவனிக்க நேரம் இல்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மும்பை மாநகராட்சி அதிகாரிகள், `பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பதா வேண்டாமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்று கைவிரித்துள்ளனர்.