மும்பை,
அமெரிக்காவை அலற வைத்து மும்பை கால்செட்டர் ஊழலில் இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மும்பை போலீஸ் கமிஷனர் தெரிவித்து உள்ளார்.
மும்பையின் முக்கிய வர்த்தக பகுதியான தானே பகுதியில் செயல்படும் சில கால் சென்டர்கள், உள் வருவாய் சேவைகள் துறையில் இருந்து அழைப்பதாக கூறி 6,000த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்களிடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான பணத்தை பறித்துள்ளனர்.
இந்த மோசடி ஏமாற்று வேலைகளில் ஈடுப்பட்டு வரும் கால் சென்டர்களில் பணிபுரிந்து வரும் ரகசிய ஊழியர் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது 23 வயது இளைஞர் என்பது தான் அதிர்ச்சியான செய்தி.
மும்பை தானே பகுதியில் மிரா சாலையில் உள்ள கால் சென்டரில் இருந்துக்கொண்டு அமெரிக்காவில் பல குடிமக்களை வருவாய் சேவை அதிகாரி என தோற்றத்தில் தொடர்பு கொண்டு வரி செலுத்தாதமைக்காக மிரட்டி அவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 500 டாலர் முதல் 60,000 டாலர் வரையிலான தொகையை அபராதம் என்று ஏமாற்றி பெற்றுள்ளனர் இந்த மோசடி மன்னர்கள்.
குறிப்பிட்ட தொகையை கொடுக்க மறுக்கும் நபர்களிடம், நீங்கள் பணத்தை செலுத்தவில்லை என்றால் 30 நிமிடத்தில் உங்களை கைது செய்யவும், உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளனர்.
ஆனால், இதுகுறித்து எவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. காரணம் கருப்பு பணம்.
இதை பயன்படுத்தி, மோசடி பேர்வழிகள், அவர்களிடம் இருந்து வாங்கும் பணத்தை, பணமாக வாங்காமல், கிப்ட் கார்டு, ஐடியூன் கிப்ட் கார்டு வாயிலாக பெற்றுள்ளனர்.
ஒருநாளைக்கு சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் இவ்வாறு மோசடி செய்து வந்துள்ளனர். இந்த மோசடியில் சுமார் 700 பேர் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி குறித்து தானே போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் கூறியதாவது:
இந்த கால் சென்டர் மோடியில் இதுவரை 70 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மும்பை தானே பகுதியில் செயல்பட்டு வரும் பல பிபிஓ நிறுவனங்கள், கால் சென்டர்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் , மோசடிக்கு தொடர்புடைய சுமார் 9 கால் சென்டர்கள் மூடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும்,
மோசடியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அமெரிக்க மொழி வழக்கில் சிறப்பாக பேசுபவர்கள், இவர்களின் உதவியுடன் VOIP என்ற இணைய வசதிகள் மூலம் அமெரிக்காவில் உள்ள மக்களை ஏமாற்றியுள்ளனர்.
VOIP மூலம் ஒருவரின் மொபைல் எண் அல்லது தொலைபேசியில் அழைக்கும்போது அவர்களுக்கு Random எண் தான் வரும், இதனால் இதனை கொண்டு யார் எங்கு இருந்து அழைக்கிறார்கள் என கண்டுப்பது கடினம். அப்படி கண்டுப்பிடிக்க பாதிக்கப்பட்டவர்கள் போலீஸிடம் புகார் அழித்திருக்க வேண்டும் ஆனால் யாரும் புகார் அளிக்காதது, மோசடி கும்பலை மேலும் உற்சாகமடைய செய்து, அவர்களின் மோசடி நாளுக்கு நாள் அதிகரிக்க வகை செய்துள்ளது என்றார்.
மேலும், இந்நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் சமுக வலைதளங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களை கண்டு நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் மோசடிக்கு மூளையாக செயல்பட்டது 23 வயதுடைய ஷேகி எனப்படும் சாகர் தாக்கர் தான் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவருடன் தபஸ் என்பவரும் ஈடுப்பட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு துணையாக இருந்த ஹைதர் அலி, ஹம்சா போலேஸார், கபீர் வர்தன், அர்ஜூன் வாசுதேவ், அப்துல் ஜாரிவாலா, ஜான்சன் டான்டோஸா, கோவிந்த தாகூர், அன்கித் குப்தா ஆகியோர் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கால் சென்டர்கள் அமெரிக்க கருப்பு சந்தையில் இருந்து தொலைபேசி எண்கள் மற்றும் அவரது விபரங்களை வாங்கியுள்ளனர். 10,000 தொலைப்பேசி எண்கள் 1 லட்சம் ரூபாய் என்ற விலையில் தகவல்களை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.