சென்னை: சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைய விருக்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் நடைபெறும் என்றும் கூறினார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் புதியதாக குழந்தைகளுக்கு என்று பிரத்யேக உயர் பன்னோக்கு மருத்துவமனை இடம் தேர்வு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தியாவில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை உதாரணமாக காட்டுவதைக் காட்டிலும் உலகளவில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்கின்ற வகையில் உலகளவில் ஒரு மிகப் பெரிய மருத்துவக் கட்டமைப்புகளோடு போட்டி போடுகின்ற மருத்துவமனை அமையவிருக்கிறது.
ஏறத்தாழ 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் இம்மருத்துவமனை அமைய உள்ளது. மேலும் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கூடிய இக்கட்டிடம் 3,15,290 சதுர அடி பரப்பிலும் மற்றும் செவிலியர் விடுதிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் விடுதிகள் போன்று அனைத்து தரப்பு விடுதிகளையும் சேர்த்து 4,38,718 சதுர அடி பரப்பில் இங்கு இக்கட்டமைப்பு அமைய பெறவிருக்கிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பாக நிர்வகிக்கப்படவிருக்கும் இம்மருத்துவமனையின் இடம் தேர்வு செய்யப்படும் பணி முடிவுற்றிருக்கிறது. இக்கட்டிடம் கட்டுவதற்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொறுத்துவதற்கும் ரூ.487.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை கட்டுவதற்கான இன்னும் ஒரு மாதம் காலத்திற்குள் ஒப்பந்தப் புள்ளி கோரும் பணி முடிவடையவிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பணியை தொடங்கி வைக்கிறார். மேலும் இம்மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ வசதிகள் தொடங்கப்பட உள்ளது.

இதில் குழந்தைகளுக்கான மருத்துவம், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகளுக்கான இரைப்பை குடல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், என்று குழந்தைகளுக்கான பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினீத், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி, கிங் இன்ஸ்டிட்யூட் இயக்குநர் இந்துமதி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி மற்றும் மருத்துவ அலுவலர்கள், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.