மும்பை: கொரோனா ஊரடங்கு காலத்தில், சாமானிய மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே துன்புற்ற நிலையில், இந்தியாவின் முதல் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியோ, அக்காலகட்டத்தில், 1 மணிநேரத்திற்கு ரூ.90 கோடி வீதம் வருமானம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தொடர்ந்து 9 வது ஆண்டாக, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் எனும் பட்டத்தை, முகேஷ் அம்பானி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் அவருடைய சொத்து மதிப்பு ரூ.2.77 லட்சம் கோடியாக அதிகரித்து, ரூ.6.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அண்மைக் காலமாக, உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை திரட்டிய நிலையில், அவர் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்து மதிப்பு கொண்டவர்களாக 828 பேர் உள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இந்த செல்வந்தர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாகும். மேலும், 100 கோடி டாலருக்கும் அதிகமான, அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,400 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை 179 ஆகும். இது, கடந்த 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, முன்று மடங்கு அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.