பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் சித்தாமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்த ஆளுநருக்கு எதிராக கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
அதேவேளையில் முடா ஊழல் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக கர்நாடக பாஜக தலைவர்கள் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு ( முடா) நடந்ததாக எழுந்த புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இது கர்நாடக மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, தன்மீதான வழக்கு விசாரணைக்கு காரணம் பாஜக என கூறியதுடன், மத்தியஅரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி, சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்து இன்று (ஆக. 19 ஆம் தேதி) மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளுடன் அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நடைபெறும் போராட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களின் கொள்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கான பாஜகவின் தந்திரம் என்று கூறி, காங்கிரஸ் சார்புடையது என்று குற்றம் சாட்டியது. சித்தராமையா, அவரது கட்சி ஆதரவுடன், ராஜினாமா செய்ய மறுத்து, அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பிரச்சினையை கையாள திட்டமிட்டார். சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தினர்.
மேலும், ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மைசூருவில் தனது மனைவிக்கு இடம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக வழக்குத் தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து சட்டப்பூர்வ வழியை முதல்வர் சித்தராமையா நாடி உள்ளார்.