ஆன்மீகப் பணிகளுக்காகக் கொடுக்கப்பட்ட கோயில் நன்கொடையிலிருந்து பணத்தை எடுத்து மடாதிபதிகள் சிலர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நிலையில், நிர்வாண வீடியோக்களை வைத்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்த விவகாரம் தாய்லாந்தை உலுக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட புத்த மத துறவிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை மிரட்டிப் பறித்ததாகக் கூறப்படும் விலாவன் எம்சாவத் என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாங்காக்கின் புறநகரில் உள்ள நொந்தபுரியில் உயர்ரக அடுக்குமாடி சொகுசு குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 35 வயதான விலாவன் எம்சாவத் என்ற மிஸ் கோல்ஃப் என்பவரை தாய்லாந்து போலீசார் கடந்த செவ்வாயன்று கைது செய்தனர்.
துறவிகளை காதல் உறவுகளில் ஈடுபடுத்தியதாகவும், நெருக்கமான வீடியோக்களை மறைத்து வைக்க பணம் கொடுக்குமாறு மிரட்டி பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மீது மிரட்டி பணம் பறித்தல், பணமோசடி மற்றும் திருடப்பட்ட சொத்தைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அவரது தொலைபேசிகளைப் பறிமுதல் செய்தனர், அதில் குறைந்தது ஒன்பது புத்த துறவிகள் சம்பந்தப்பட்ட 80,000 க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. மூன்று ஆண்டுகளில் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி சுமார் 385 மில்லியன் பாட் (தோராயமாக 11.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 102 கோடி) சம்பாதித்ததாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.
ஆன்மீகப் பணிகளுக்காகக் கொடுக்கப்பட்ட கோயில் நன்கொடைகளிலிருந்து இந்தப் பணத்தைப் ரகசியமாக துறவிகள் பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து இந்த விவகாரம் தாய்லாந்தை உலுக்கியது.
பிரபலமான கோயில்களைச் சேர்ந்த மூத்த மடாதிபதிகள் உட்பட, சம்பந்தப்பட்ட பல துறவிகள் இப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டு துறவிப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாங்காக்கின் வாட் திரி தோட்சதெப் மடாலயத்தைச் சேர்ந்த ஒரு துறவி மிரட்டல் காரணமாக கடந்த மாதம் துறவிப் பதவியிலிருந்து விலகினார்.
காணாமல் போன மடாதிபதியுடன் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாக எம்சாவத் குற்றம் சாட்டியுள்ளார், இது பொதுமக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.
இந்த ஊழல் விவகாரம் தாய்லாந்தின் பௌத்த மடாலயங்கள் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.
இதையடுத்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தனது வரவிருக்கும் 73 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு 80 க்கும் மேற்பட்ட துறவிகளுக்கான அழைப்புகளை ரத்து செய்து, “தாய் மக்களிடையே மன உளைச்சலுக்கு வழிவகுத்த பொருத்தமற்ற நடத்தை” என்று குற்றம் சாட்டினார்.
அதே நேரத்தில், துறவிகளுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள் மீது வழக்குத் தொடரக்கூடிய புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த செனட் குழு பரிந்துரைத்துள்ளது.
தாய்லாந்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பௌத்தர்கள், அதில் குறைந்தது 200,000 பேர் துறவிகள் என்றும் 85,000 பேர் புதிதாக துறவு மேற்கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தாய்லாந்தில் பௌத்த துறவிகள் மீதான பாலியல் மற்றும் பணம் தொடர்பான ஊழல்கள் புதிதல்ல என்றாலும், உயர் மடாதிபதிகள் சிலரே இந்த குற்றம் சாட்டப்பட்டுக்கு ஆளாகியிருப்பது புத்த மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.