இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பங்கேற்றதை தொடர்ந்து 300வது டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 212 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்ப வெற்றிப்பெற வேண்டிய இந்த போட்டியை இந்தியா தவறவிட்டது. 4 ரன்கள் வித்யாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. அதுமட்டுமின்றி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனவும் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி டி20 அரங்கில் சாதனை படைத்துள்ளார். இதுவரை 299 டி20 போட்டியில் தோனி பங்கேற்ற நிலையில் இன்றைய போட்டி அவருக்கு 300வது போட்டியாக அமைந்தது. இதன் மூலம் 300 டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றையும் தோனி படைத்துள்ளார். இதில் சர்வதேச அளவில் 95 போட்டிகளில் தோனி பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் உள்ளிட்டவர்களின் சாதனையையும் தோனி சமன் செய்துள்ளார்.
இவர்களுக்கு முன்னதான மேற்கிந்திய தீவுகள் அணி வீரார் கைரன் போலார்டு 446 போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை தோனி பங்கேற்ற டி20 போட்டிகளில் 6134 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடித்துள்ளார்.
தோனியை தொடர்ந்து 298 போட்டிகள் பங்கேற்ற ரோஹித் சர்மா 2வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளில் பங்கேற்று 3வது இடத்திலும், தினேஷ் கார்த்திக் 260 போட்டிகளில் பங்கேற்று 4வது இடத்திலும் உள்ளனர்.