டாக்கா

ங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக பெருமளவில் வெடித்த மாணவர் போராட்டமும், வன்முறையும் உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.

வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்து இருக்கிறது. வங்காளதேசத்தில் வன்முறையும், கலவரமும் ஓயாமல் இதுவரை வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் என்பவர் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமிர் ஹம்சா ஷாடில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

“ஜூலை 19 ஆம் தேதி மாலை 4:00 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபு சயீத் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், உள்துறை மந்திரி அசதுஸ்மான் கான் கமல், முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன், முன்னாள் டிபி தலைவர் ஹருன் ஓர் ரஷீத், முன்னாள் டிஎம்பி கமிஷனர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் டிஎம்பி இணை கமிஷனர் பிப்லாப் குமார் சர்க்கர் உள்ளிட்ட 6 பேரும் காரணம்”

என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.