டில்லி

போபால் ஷதாப்தி ரெயிலில் மாரடைப்பால் துடித்த பெண்ணை அமைச்சருடன் தொலைபேசியில் பேசி ஜோதிராதித்யா சிந்தியா எம் பி காப்பாற்றி உள்ளார்.

சுரேஷ் பிரபு ரெயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற உடன் அனைத்து ரெயில்களிலும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என உறுதி அளித்திருந்தார்.   ஆயினும் இது வரை எந்த ஒரு ரெயிலிலும் முதலுதவி செய்வதற்கு போதிய வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை.  அவருக்குப் பின் தற்போது பியூஷ் கோயல் பொறுப்பேற்றுள்ளார்.    தற்போது ரெயிலில் நடைபெற்ற ஒரு சம்பவம் மருத்துவ வசதியின் அவசியத்தை அனைவருக்கும் புரிய வைத்துள்ளது.

போபால் ஷதாப்தி ரெயிலில் வந்தனா என்னும் பெண் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.  அவர் பயணம் செய்த அதே பெட்டியில் குவாலியர் அரச குடும்பத்தை சேர்ந்தவரும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோதிராதித்யா சிந்தியாவும் பயணம் செய்துள்ளார்.  ஆக்ராவில் இருந்து டில்லியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரெயில், நள்ளிரவில் டில்லியின் அவுட்டரில் சுமார் 150 நிமிடங்களுக்கும் மேலாக நிற்க வைக்கப்பட்டது.  யாருக்கும் என்ன காரணம் என்பது தெரியவில்லை.

சிந்தியாவுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண் வந்தனா திடீரென நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்து விட்டார்.  உடனே சிந்தியா ரெயில் கார்டு மற்றும் ஓட்டுனரை அழைத்து ரெயிலில் அவருக்கு மருத்துவ உதவிகள் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  அந்த ரெயிலில் மருத்துவ வசதிகள் ஏதுமில்லை என சொல்லப்பட்டது.

நேரத்தை வீணடிக்க விரும்பாத சிந்தியா உடனடியாக ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலையும், ஆக்ராவில் உள்ள ரெயில்வே அதிகாரியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  ஆயினும் 21/2 மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. வந்தனாவுடன் சிந்தியாவும் அதே ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  அவரை உடனடியாக அவசரப் பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள், இன்னும் சிறிது தாமதம் ஆனாலும் அவர் பிழைத்திருக்க மாட்டார் என தெரிவித்தனர்.   இந்த சமயோசித செய்கைக்காக சிந்தியாவை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்த ஆக்ரா சுற்றுலாத்துறை அதிகாரி விஷால் சர்மா, “முக்கியமானவர்கள் மட்டுமே பயணிக்கும் ஷதாப்தி ரெயிலிலும் மருத்துவ வசதிகள் இல்லாதது மிகவும் கண்டிக்கத் தக்கது,  அது மட்டுமின்றி நேரத்தில் செல்வதற்காகவே ஷதாப்தி ரெயிலை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.  ஆயினும் அந்த ரெயிலை காரணமின்றி நிறுத்தி வைத்தது மிகவும் தவறானது.  பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரும் உள்நாட்டினரும் ஆக்ராவுக்கு தினமும் வந்து போகின்றனர். ஆனால் அரசு நேரத்துக்கு ரெயில்களை இயக்குவது இல்லை.  இது பயணிகளுக்கு மிகவும் துயரத்தை அளிக்கிறது.

ராஜ்தானி, ஷதாப்தி போன்ற ரெயில்களிலும் மருத்துவ வசதிகள் இல்லாதது மிகவும் துரதிருஷ்டவசமானது.   அமைச்சர்கள் உத்தரவிட்டாலும் பல சமயங்களில் அதிகாரிகள் அதை நிறைவேற்றுவதில்லை.   காரணம் அமைச்சர்கள் நிரந்தரம் இல்லை என அதிகாரிகள் நினைப்பதுதான்.  அனைத்து ரெயில்களிலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அடங்கிய போர்டுகளை மாட்ட வேண்டும்.” என கருத்து தெரிவித்தார்.