போபால்:

மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பசு பாதுகாப்பு, கோமியம், சானம் தொடர்பான விவாதம் நடந்தது. மேலும், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் விவசாய நிலங்களில் மேய்ந்து விடுவதால் விவசாயிகள் பாதிக்கப்ப டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதில் பாஜ எம்எல்ஏ.க்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசினர். அதில் சில விபரங்கள்:

முரளிதர் பட்டீதர் பேசுகையில்,‘‘ வறுமை கோட்டிற்கு கீழ் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேசன் மற்றும் அரசின் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒரு பசு மாடு வளர்க்க வேண்டும் என்று ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது. குறைந்தபட்சம் ஒரு மாடு இல்லை என்றால் வறுமை கோட்டிற்கு கீழ் வழங்கப்படும் சலுகைகள் கிடையாது என்று அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

சங்கர்லால் திவாரி பேசுகையில்,‘‘ அறுவடைக்கு முன்பு மாடுகள் விவசாய நிலங்களில் மேய்ந்தால் அந்த மாடுகளின் உரிமையை விவசாயிகள் இழக்கும் சட்டம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படுகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக புதிய தீர்மானம் கொண்டு வரவேண்டும்’’ என்றார்.

தீவன பற்றாகுறை, மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு போன்றவை காரணமாக மாடுகளை தெருக்களில் மேய விடும் நிலைக்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை பெரும்பாலான எம்எல்ஏ.க்கள் ஏற்றுக் கொண்டனர்.

முரளீதர் பட்டிதர் தொகுதியில் தான் இந்தியாவிவ் முதல் மாடுகள் சரணாலயம் உள்ளது. அவர் மேலும் பேசுகையில்,‘‘ பசு மாடுகள் அதன் மதிப்பை இழந்து வருகின்றன. அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டதால் விவசாயிகள் அதன் மீது அக்கறை காட்டுவதில்லை.

இங்குள்ள சரணாலயம் குறித்து மக்கள் பலரும் விசாரித்து செல்கின்றனர். சரணாலயத்தை திறந்துவிட்டால் 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாடுகளை உள்ளே கொண்டு வந்து விடும் அச்சம் உள்ளது. இங்குள்ள 472 ஹெக்டேர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் மாடுகள் மட்டுமே பராமரிக்க முடியும்’’ என்றார்.

ப்ரஜாபதி பேசுகையில்,‘‘எனது தொகுதியில் ரோடில் சுற்றித்திரியும் மாடுகள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் தொகுதிக்குள் என்னால் நுழைய முடியவில்லை. எனது தொகுதியில் ஒரு மாடுகள் சரணாலயம் அமைக்க வேண்டும். ஆனால் இதற்கான எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை.

சரணாலயம் அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். விவசாயிகளுக்கு தேள், பாம்பு போன்ற அபாயங்கள் இருந்த அவர்கள் நிலத்தை விட்டுவிடவில்லை. எனினும் தெரு மாடுகள் பயிர்களை நாசம் செய்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை’’ என்றார்.

திவ்யராஜ் சிங் பேசுகையில்,‘‘ அடையாள வில்லைகள் இல்லாமல் சுற்றித் திரியும் மாடுகள் வன விலங் குகளாக கருதி அவற்றை தேசிய பூங்காக்களிலோ அல்லது வனப்பகுதியிலோ கொண்டு விட்டுவிட வேண் டும்’’ என்றார்.